ஆன்மிகம்

ஆனி மாத தர்ப்பணம்; முன்னோர் வழிபாடு மறக்காதீங்க! 

வி. ராம்ஜி


ஆனி மாதம் நாளைய தினம் திங்கட்கிழமை (15.6.2020). தமிழ் மாதப் பிறப்பான நாளைய தினத்தில், பித்ருக்களை வழிபடுவோம். அவர்களின் ஆசியையும் அருளையும் பெற்று, வாழ்வில் உள்ள தடங்கல்களெல்லாம் நீங்கப் பெறுவோம்.


ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்து, முன்னோர் வழிபாட்டைச் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். பித்ரு வழிபாட்டைச் செய்யாமல் விட்டால், நாமும் நம் வம்சமும் பித்ரு சாபத்துக்கும் பித்ரு தோஷத்துக்கும் ஆளாவோம் என்றும் எச்சரிக்கிறது சாஸ்திரம்.


ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளயபட்ச காலங்கள், கிரகண காலம், திதி உள்ளிட்டவை என 96 தர்ப்பணங்கள் உள்ளன என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


மாதப் பிறப்பு நாளில், தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோரை நினைத்து, அவர்களின் பெயரைச் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களிடுங்கள். காகத்துக்கு அவர்களை நினைத்து உணவிடுங்கள். அரிசியும் வாழைக்காயும் ஆச்சார்யர்களுக்கு வெற்றிலை பாக்கு தட்சணையுடன் வழங்குங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடுவது முக்கியம், அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவிடுதல் மிக மிக முக்கியம்.


முடிந்தால், நம் முன்னோர்களுக்குப் பிடித்த உணவைப் படையலிடுங்கள். நான்குபேருக்கேனும் உணவு வழங்குங்கள். தயிர்சாதப் பொட்டலமாவது வழங்குங்கள்.
வீட்டில், முன்னோரை நினைத்து பூஜையறையில் விளக்கேற்றுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். குடும்பமாக சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார்கள். நல்லனவெல்லாம் வழங்கி ஆசீர்வதிப்பார்கள்.


நாளைய தினம், ஆனி மாதப் பிறப்பில், மறக்காமல் பித்ருக்களை வணங்குவோம். நாமும் நம் சந்ததியினரும் குறைவின்றி நிறைவுற வாழ்வோம்.

SCROLL FOR NEXT