சனிக்கிழமை நாளில், சக்கரத்தாழ்வாரை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். நம் சங்கடங்கள் அனைத்தும் தீரவேண்டும் என்றும் உலக மக்களின் வேதனைகள் யாவும் நீங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.
பொதுவாகவே சனிக்கிழமை என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த அற்புதமான நாள். புதன் கிழமையும் சனிக்கிழமையும் மகாவிஷ்ணுவை, திருமாலை, பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாளாகச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திர நாளும் பெருமாள் வழிபாட்டுக்கு முக்கியமானது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதேபோலத்தான், சனிக்கிழமையும் புதன் கிழமையும் துளசி மாலை சமர்ப்பித்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம்.
அதேபோல், ராமபக்தனான அனுமனையும் இந்தநாளில், வணங்கி வழிபடுவோம். இதேபோல், மகாவிஷ்ணுவின் திருஆயுதமான சக்கரத்தையும் நாம் தனியே வழிபட்டுக்கொண்டிருக்கிறோம். மகாவிஷ்ணுவின் சக்கரத்துக்கு சுதர்சனம் என்று பெயர். சுதர்சனம் என்றால் சக்கரம். அவரின் ஆயுதமான, சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்று போற்றி வணங்குகிறோம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சுதர்சனரை வழிபடுகிறார்கள் பக்தர்கள். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில், சக்கரத்தாழ்வார் சந்நிதியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்வதைப் பார்க்கலாம்.
அதேபோல், மதுரை - மேலூர் சாலையில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர். இந்தக் கோயிலில் உள்ள பெருமாளின் திருநாமம் - காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் - மோகனவல்லித் தாயார். பெருமாள் குடிகொண்டிருக்கும் இந்தக் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி மிகவும் சாந்நித்தியம் நிறைந்தது.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், வாரம் தவறாமல் சனிக்கிழமைகளில், ஒத்தக்கடை ஆனைமலையில் உள்ள ஸ்ரீநரசிம்மரையும் ஒத்தக்கடை பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வாரையும் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு, ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து செய்து வர, தீய வினைகள் யாவும் விலகும். துஷ்ட சக்திகள் அனைத்தும் செயலிழக்கும். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து, நம் வாழ்வில் நிம்மதியையும் மகோன்னதமான செயல்களையும் நடத்தியருள்வார் சக்கரத்தாழ்வார்.
சனிக்கிழமை நாளில், சக்கரத்தாழ்வாரை வீட்டிலிருந்தே வேண்டிக்கொள்ளுங்கள். ஒரு கை துளசி சமர்ப்பியுங்கள். புளியோதரை சாதம் நைவேத்தியம் பண்ணி வழிபடுங்கள். இந்தப் புளியோதரையை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். முடிந்தால், நான்குபேருக்கு புளியோதரைப் பொட்டலம் வாங்கிக் கொடுங்கள்.
உங்கள் இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் பெருக்கியருள்வார் சக்கரத்தாழ்வார்.