ஆன்மிகம்

காகத்துக்கு ஏன் உணவிடவேண்டும்?  

வி. ராம்ஜி

காகத்துக்கு உணவு வைப்பது எல்லா வீடுகளிலும் நடப்பதுதான். ஆனால் இதை வெறும் சடங்கு சம்பிரதாயமாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். ஆனால் காகத்துக்கு வைக்கும் உணவால், நம் செயலும் சிந்தனையும் நல்வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது என்பதும் நம் வாழ்வும் நம் சந்ததியும் செழிக்கும் என்பதை அறிவோமா?


அமாவாசை மாதிரியான நாட்கள், முன்னோர்கள் என்று சொல்லப்படும் பித்ருக்களின் திதி முதலான நாட்களில்தான் காகத்துக்கு உணவு வைப்பார்கள் ஒரு சிலர். அன்றைய நாளில், காகம் சாப்பிட்ட பிறகே, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள்.


சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். அதேபோல், காகம், முன்னோர்களின் வடிவம் என்றும் சொல்லுவார்கள். அதேபோல், எமலோகத்தின் வாசலில் காகம் இருக்கும் என்றும் எமனின் தூதுவனாக, நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் குணம் காகத்துக்கு உண்டு என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல்,முன்னோர்கள் நம் வீட்டுக்கு காகரூபமாக வந்து செல்கிறார்கள் என்பது ஐதீகம்.


காகத்துக்கு நாம் உணவு வைத்தால், ஒருபக்கம் எமதருமராஜனும் இன்னொரு பக்கம் சனீஸ்வரரும் மகிழ்ந்துவிடுகிறார்களாம். முன்னோர்களுக்கும் நமக்கும் தொடர்ந்து சந்ததி சந்ததியாக ஒரு பந்தத்தை காகம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது ஐதீகம்.


காலையில் சூரிய உதயத்துக்குப் பின்னர், நம் வீட்டு வாசலில், காகம் சத்தமிட்டால், அன்றைய பொழுது நமக்கு நல்லவிதமாக விடிந்திருக்கிறது என்று அர்த்தம். அந்த சமயத்தில், காகத்துக்கு நம் வீட்டில் இருக்கும் உணவை வைக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் நம் முன்னோர்களின் ஆசி, நமக்கும் நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்.


மேலும், காகம் நம் வீட்டுக்கு அருகில், வாசலுக்கு அருகில் சத்தமிட்டால், நாம் நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிகழும். குழந்தை பாக்கியம் மேம்படும். சந்ததியினர், வாழையடி வாழையாக செழிப்பார்கள் என்கிறது சாஸ்திரம்.


மேலும், காகத்துக்கு உணவிடுவது மிகவும் சிறந்தது. அமாவாசை, திதி காலம் என்றில்லாமல், தினமும் காகத்துக்கு உணவிடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். நாம் தினமும் உணவு வைப்பதால், முன்னோர்கள் பசியாறுகிறார்கள். அதில் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். ஒவ்வொரு முறை காகத்துக்கு உணவிடும் போதும், நம் முன்னோர்களின் பெயர்களை மனதுக்குள் சொல்லி வேண்டிக்கொள்வது நற்பலன்களைத் தரும்.


கடன் பிரச்சினையால் தவிப்பவர்கள், தொழிலில் நசிவு ஏற்பட்டுவிட்டதே என்று கலங்குபவர்கள், வீட்டில் யாருக்காவது நோய்த் தொந்தரவு ஏற்படுகிறதே என வருந்துபவர்கள் தினமும் காகத்துக்கு உணவிடுங்கள். நம் முன்னோருக்குப் பிடித்த உணவை காகத்துக்கு வழங்குங்கள். கடன் பிரச்சினையெல்லாம் தீரும். வீட்டுக் கஷ்டமும் துக்கமும் நிவர்த்தியாகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

SCROLL FOR NEXT