ஆன்மிகம்

புதனும் திருவோணமும் இணைந்தநாள்; ஐஸ்வர்யம் தரும் ஏழுமலையான் வழிபாடு!

வி. ராம்ஜி

திருவோணத்தில் திருமால் வழிபாடு, மிகவும் சாந்நித்தியம் வாய்ந்தது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இந்த அற்புதநாளில், திருவோண நட்சத்திரநாளில், மகாவிஷ்ணுவை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்கள் நடந்தேறும். சிக்கலும் குழப்பமும் விலகும். பிரச்சினைகளில் இருந்து விடுவித்துக் காத்தருள்வார் விஷ்ணு பகவான்.


மகாவிஷ்ணுவை வணங்குவதற்கு உரிய நாளாக புதன்கிழமை சொல்லப்படுகிறது. பொதுவாகவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றொரு பழமொழி உண்டு. பொன்னும் தங்கமும் மேலானவை என்கிறோம். ஆனால் அதைவிட, புதன் கிழமை என்பது இன்னும் மேலானது, உயர்வானது, உன்னதமானது என்று போற்றப்படுகிறது.
அதனால்தான், தனமும் தானியமும் பெருக்கித் தந்தருளும் மகாவிஷ்ணுவுக்கு உகந்தநாளாக புதன்கிழமையைக் கொண்டாடுகிறோம். ஐ

ஸ்வர்ய பாக்கியத்தை அருளும் உன்னத நன்னாள் இது. மகாவிஷ்ணு ஆலயங்களுக்கு புதன்கிழமையும் சனிக்கிழமையும் சென்று வேண்டிக்கொள்வது விசேஷம் எனும் முறை, இதனால்தான் வந்தது.


இதேபோல், சிவபெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மகாவிஷ்ணுவின் திருநட்சத்திரம் திருவோணம். மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திர நாளில், பெருமாளை ஸேவிப்பதும் விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வதும் வீட்டில் உள்ள தரித்திர நிலையையே மாற்றும் என்பது ஐதீகம்.


திருவோண நட்சத்திரமும் புதன் கிழமையும் இணைந்து வரும் நாள், இன்னும் பலமும் வளமும் தரக்கூடிய நன்னாள். இந்தநாளில், வீட்டில் உள்ள பெருமாள் திருவுருவப் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இடுங்கள். துளசி சார்த்துங்கள்.


விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். மகாவிஷ்ணுவை மனதார நினைத்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்யுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியத்தை வழங்குங்கள்.


திருவோண நட்சத்திரத்தில் விரதம் மேற்கொண்டு, திருமாலை வணங்குவது மகத்துவமானது. விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், பெருமாளை மனதார வேண்டிக்கொண்டாலே போதும்.


புதனும் திருவோணமும் இணைந்த அற்புதமான நன்னாளில், மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே ஹயக்ரீவரையும் ராம பக்த அனுமனையும் வேண்டிக்கொள்ளுங்கள்.


உங்கள் வீட்டின் தரித்திர நிலையை மாற்றியருள்வார் வேங்கடவன். தனம் தானியம் பெருக்கி, நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தருள்வார் ஏழுமலையான்.

SCROLL FOR NEXT