ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் நம் ஆசையும் வேண்டுதலும். அதை அருள்வதற்கு ஒவ்வொரு தெய்வமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அவசரகதியில் ஓடிக்கொண்டிருப்பதால், எதையும் உணருவதுமில்லை; தெளியவுமில்லை.
இப்போது, ஓடுவதை நிறுத்திவிட்டு, ஒரு நிதானத்துக்கு வந்திருக்கிறோம். நிம்மதியான வாழ்க்கைக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் எது தேவை என்பதை உணர்ந்து புரிந்துகொண்டிருக்கிற தருணம் இது.
கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது தன்வந்திரி கோயில், தன்வந்திரி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். நோய்களையெல்லாம் தீர்த்தருள்வார்; ஆரோக்கியத்தை வழங்கியருள்வார் தன்வந்திரி பகவான்.
வேதாரண்யம் அருகில் உள்ளது பவஒளஷதீஸ்வரர் திருக்கோயில். நோய்களைத் தீர்க்கும் அற்புதமான திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள், தீராத நோயால் உறவினர்களோ நண்பர்களோ அவதிப்பட்டு வந்தால், படுத்தபடுக்கையாக இருந்தால், இங்கு வந்து அவர்களுக்காக வேண்டிக்கொள்வார்கள். விரைவிலேயே அவர்கள் குணமாகிவிடுவார்கள்.
நீங்களும் இருந்த இடத்திலிருந்தே, உங்கள் இல்லத்தில் இருந்தே வேண்டிக்கொள்ளுங்கள். திங்கள், பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு முதலான நாட்களில், சிவனாரை நினைத்து வீட்டில் விளக்கேற்றி, வேண்டிக்கொள்ளுங்கள். பலகாலமாக இருக்கும் தீராத நோயையும் தீர்த்தருள்வார் சிவனார்.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். இங்கே அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்.
மகரிஷியின் தவத்துக்கு மகிழ்ந்து, இந்தப்பகுதி மக்களின் நோய்களைத் தீர்ப்பதற்காக, திருப்பதி ஏழுமலையானே இங்கு வந்து அருள்பாலித்து நோய் தீர்த்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தலபுராணம்.
எனவே, திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்பார்கள். திருப்பதியில் வேண்டிக்கொள்ள நினைப்பவர்கள், இங்கு வந்து குணசீலம் பெருமாளை வேண்டிக்கொண்டால், விரைவில் குணமாகலாம்; நலம் பெறலாம் என்பது ஐதீகம்!
குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கையில் செங்கோலுடன் காட்சி தந்து ஆட்சி நடத்துகிறார். உடலை பரிபூரணமாகக் காத்தருள்வது மட்டுமின்றி, மனநலனையும் காத்தருள்கிறார். மனதையும் தெளிவுப்படுத்தி அருள்கிறார். மனோ பலம் தருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் அற்புதமான திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில், ஏகாதசி நாட்களில், திருவோண நட்சத்திர வேளைகளில், குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு துளசி மாலை சார்த்தி வணங்குங்கள். தயிர்சாதம் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து நான்குபேருக்கேனும் புளியோதரை வழங்குங்கள். மன நலனையும் உடல் நலனையும் காத்தருள்வார் குணசீலம் பெருமாள்!