அம்பாளுக்கு பெளர்ணமியும் விசேஷம்.வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. நாளை ஜூன் 5ம் தேதி வெள்ளிக்கிழமை, பெளர்ணமி. இரண்டும் இணைந்த மகத்துவம் மிக்க நாள். இந்தநன்னாளில், ஞானசக்தியாகத் திகழும் வடிவுடையம்மனை வீட்டிலிருந்தபடியே நேரலையில் தரிசிக்க, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
உலகையாளும் பராசக்தியானவள், இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளாக முப்பெருந்தேவியராக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.
இந்த முப்பெருந்தேவியரை வெள்ளிக்கிழமையில் வழிபடுவதும் பெளர்ணமியில் தரிசித்து வணங்குவதும் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள். அதிலும் குறிப்பாக, ஞானசக்தியாகத் திகழும் திருவொற்றியூர் வடிவுடையம்மனை பெளர்ணமியும் வெள்ளியும் இணைந்தநாளில் வழிபட்டால், தடைப்பட்ட காரியங்கள் யாவும் நடந்தேறும். வீட்டில் மங்கல காரியங்கள் மனதுக்கு தக்கபடி நிகழும் என்கிறார்கள், பலன் பெற்ற பக்தர்கள்.
எனவே முப்பெரும் சக்திகளுள் ஒன்றான ஞான சக்தியாகிய ஸ்ரீவடிவுடை அம்மனுக்கு 05.06.2020 நாளைய தினம் பௌர்ணமியும் வெள்ளிக் கிழமையும் இணைந்தநாளில், உற்ஸவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திரிசதி அர்ச்சனை முதலானவை நடைபெறுகிறது. இந்த அற்புத வழிபாட்டை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்ப ஆலய நிர்வாகம் திட்டமிடப்பட்டு உள்ளது.
பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 05.06.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை, நேரலை ஒளிபரப்பு மூலம், தரிசித்து அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறலாம்.
மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும். இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் பௌர்ணமி வெள்ளி சிறப்பு வழிபாட்டினை நேரலையில் கண்டு வடிவுடையம்மனின் அருளைப் பெற அனைவருக்கும் உதவுங்கள் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.