ஆன்மிகம்

இறைநேசர்களின் நினைவிடங்கள்: முத்துப்பேட்டை மகான் ஷேக் தாவூது

ஜே.எம்.சாலி

தஞ்சை மாவட்டக் கடற் கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டையில் இறைநேசர்களின் நினைவிடங்களாக தர்காக்கள் உள்ளன. மகான் ஷேக் தாவூது தர்கா, பீவி பாத்திமா அம்மா தர்கா, ஆற்றுக்கரை பாதுஷா நாயகர் தர்காஆகிய நினைவிடங்கள் பிரபலமானவை. இயற்கை வளம் மிக்க ஆறும், குளமும்,பள்ளிவாசலும் ஊருக்கு அழகூட்டுகின்றன.

இந்த நினைவிடங்கள் உருவான விதம் குறித்துச் சொல்லப்படும் சம்பவம் வியப்பளிக்கக் கூடியது.

இருநூறு ஆண்டுகள்

இறைநேசர் ஷேக் தாவூது அவர்கள் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே முத்துப்பேட்டைக்கு வந்து, மத நல்லிணக்கத் தொண்டாற்றிப் பல அற்புதங்களை நிகழ்த்திவிட்டு அடக்கமானதாகக் கூறப்படுகிறது. எனினும், இருநுாறு ஆண்டுகளுக்குப் பிறகே அவர்கள் அங்கு அடக்கமாகியிருப்பது கண்டறியப்பட்டது.

அப்போது முத்துப்பேட்டை ஜம்புவானோடை காடு சூழ்ந்த நிலப்பகுதியாக இருந்தது. அந்த நிலத்திற்குச் சொந்தக்காரரான கருப்பையா கோனார் தனது ஆட்களுடன் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏர் முனை ஓர் இடத்தில் பட்டு அங்கிருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. அதைத் தொடர்ந்து அவருடைய கண்கள் பார்வையிழந்தன. பதற்றமடைந்து வீட்டுக்குச் சென்றார்.

கண் பார்வை போய்விட்ட கவலையை கருப்பையாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த வருத்தத்துடன் உறங்கச் சென்றார். துாக்கத்தில் ஒரு கனவு கண்டார். கம்பீரமான ஓர் அரபுப் பெருமகன் காட்சியளித்தார். அன்று காலை நிலத்தை உழுதபோது ஏர் முனை பட்ட இடம் தமது உடலே என்று சொன்னார். அந்த இடத்தில் தாம் அடக்கமாகி நீண்ட காலம் ஆகிறது என்றும் தெரிவித்தார். ஷேக் தாவூத் என்பதே தமது பெயர் என்றும் கூறினார்.

மலர்கள் பூக்கும்

“உனது கவலைகள் நீங்கும். கண் பார்வை கிடைக்கும். நாச்சிகுளம் கிராமத்தில் கபீர் கான், ஹமீத் கான் என்ற இருவர் இருக்கிறார்கள். வட நாட்டைச் சேர்ந்த அவர்கள் இருவரையும் நேரில் சென்று அழைத்துவர வேணடும். நீங்கள் மூவரும் திரும்பி வந்து பார்க்கும் சமயத்தில் இரத்தம் பீறிட்டிருந்த இடத்தில் இரண்டு முனைகளிலும் மலர்கள் பூத்திருப்பதைக் காண்பீர்”என்று கூறிவிட்டு அந்தப் பெருமகன் மறைந்தார்.

கனவு கலைந்தது. கருப்பையாவின் துாக்கமும் கலைந்தது. கண்ணைத் திறந்து பார்த்தார். பார்வை கிடைத்துவிட்டது. மகிழ்ச்சிப் பெருக்கில் கனவுக் காட்சியை மற்றவர்களிடம் விவரித்தார்.

கனவில் பெரியவர் கூறியபடி மூன்று பேரும் முத்துப்பேட்டைக்கு வந்தனர். கருப்பையா கோனார் தமக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஷேக் தாவூது மகான் பெயரில் சாசனம் செய்து வைத்தார். மக்கள் அதிகமாக வரத் தொடங்கியதால் அங்கு ஒரு தர்காவைக் கட்ட முடிவு செய்தார்கள். அதன்படி 77 முழ நீளம், 29 முழ அகலம்,8 முழ உயரமுடைய நான்கு பக்கச் சுவர் அமைக்கப்பட்டது பதினைந்து வளைவு மண்டபங்களும் கட்டப்பட்டன மலர் அடையாளம் காணப்பட்ட இடம் அடக்க ஸ்தலமாக்கப்பட்டது.

கனவில் அறுவை சிகிச்சை

ஷேக் தாவூது மகானின் சரித்திரம் பற்றிய நுால் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் பனீ இஸ்ராயீல் குல மரபைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. யாகூப் நபியின் வழித்தோன்றல்களே பனீ இஸ்ராயீல் என அழைக்கப்பட்டனர். ஷேக் தாவூது அவர்கள் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகரின் காலத்துக்கு முன்பே வாழ்ந்தவர். அதனால் முத்துப்பேட்டை மகானை நாகூரார் புகழ்ந்துபோற்றியதாகச் சொல்லப்படுகிறது.

முத்துப்பேட்டை இறைநேசர் தலைசிறந்த மருத்துவராக விளங்கினார். மருத்துவர்கள் புறக்கணித்த நோயாளிகளை அவர் குணப்படுத்தினார். செய்வினை, சூனியம், சித்த சுவாதீன இழப்பு, பிள்ளைச் செல்வமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தர்காவில் தங்கிப் பரிகாரம் பெற்றுச் சென்ற அற்புத வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது

தர்காவில் தங்குகிறவர்களின் கனவில் ஷேக் தாவூது அவர்கள்தோன்றி அறுவை சிகிச்சை செய்வதாகவும், அதற்குப் பிறகு அவரகள் குணமடைந்துசெல்வதாகவும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது உதவிபுரியும் தாதியாக ஒரு பெண்மணி தோன்றுவார் என்றும் சொல்லப்படுகிறது. முத்துப் பேடடையில் அடக்கமாகியுள்ள பாத்திமா நாச்சியார் எனும் இறைநேசச் செல்வியே அவர் என்று நம்புகின்றனர்.

பாத்திமா நாச்சியாரின் நினைவிடமான தர்காவும் முத்துப் பேட்டையிலுள்ள முதலை முடுக்கில் அமைந்துள்ளது.

அந்த அம்மையார் காஷ்மீரிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது. ஒன்பது வயதுக்குள் குர்ஆனை மனப்பாடம் செய்துவிட்டு, பாரசீக மொழியிலும் புலமைபெற்றார். ஷெய்க் முன்ஷி ஆலிம் என்ற ஆசிரியரிடம் மெய்ஞ்ஞானத் தத்துவங்களைக் கற்றுவிட்டு முத்துப்பேட்டைக்கு வந்தார்

அவர் நினைவாகப் பிற்காலத்தில் தர்கா கட்டப்பட்டது. அவருக்கு மஸ்தானா காத்துான் என்ற பெயரும் உண்டு. பாத்திமா நாச்சியாரின் தரிசனக் காட்சி சிலருக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இறைநேசர் ஷேக் தாவூது அவர்களின் நினைவு விழா ஆண்டுதோறும் ஜமாதில் அவ்வல் மாதம் பிறை பத்தில் கொணடாடப்பபட்டு வருகிறது.

முத்துப்பேட்டையின் மறக்கவியலாத ஆன்மிக நினைவாக இறைநேசர்கள் ஷேக் தாவூதும், பாத்திமா நாச்சியாரும் இருக்கிறார்கள்.

தர்காவில் தங்குகிறவர்களின் கனவில் ஷேக் தாவூது அவர்கள்தோன்றி அறுவை சிகிச்சை செய்வதாகவும், அதற்குப் பிறகு அவரகள் குணமடைந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது உதவிபுரியும் தாதியாக ஒரு பெண்மணி தோன்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT