சப்த மாதர்களில் ஸ்ரீ வாராஹியும் ஒருத்தி. பராசக்தியின் படைத் தளபதி இவள்தான். பண்டாசுரனை அழித்தவள். பஞ்சமீ, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி முதலான பெயர்களும் உண்டு.
சக்தியும் உக்கிரமும் கொண்டவள். இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்கிறார்கள் ஸாக்த உபாஸகர்கள்.
ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர். முக்கிய மந்திரி. வேண்டுபவர்களுக்கு வேண்டியதையெல்லாம் விரைவாகத் தந்தருள்பவள். பூமி செழிக்கவும், தானியம் பெருகவும், விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர்கலப்பையும், உலக்கையையும் தன் திருக்கரங்களில் ஏந்தியவள்.
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.
வாராஹி வழிபாடு என்பது மிக மிக எளிமையான வழிபாடு. இளகிய மனம் கொண்டவள் என்பதால், உடனடியாக அருள் செய்து நம்மை மகிழ்விப்பவள்.
பக்தர்களுக்குத்தான் கனிவானவள். அதேசமயம், பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா விவரிக்கிறது.
அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து மனிதகுலத்தைக் காக்க வராஹி வடிவம் கொண்டாள். வராக முகம் என்பது பன்றியின் முகம். இழிகுணம் படைத்த தீயோரது உடலங்கங்களைக் தக்க தருணத்தில் அழிக்கும் பராக்கிரமக்காரி. பரோபகாரி. உலக்கையும் ஏழு ஆயுதங்களையும் ஏந்தி இருப்பவள். சிரித்த முகத்தைக் கொண்டிருப்பவள்.
துன்பங்களை நீக்க வேண்டி, தியானிப்பவர்களின் உள்ளத்தில் என்றும் நீங்காது இருப்பாள்.
எப்போதெல்லாம் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுகிறீர்களோ, அப்போதெல்லாம் மனதில் வாராஹியை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் வளமாக்கித் தந்தருள்வாள் வராஹிதேவி.