காசி சென்று வழிபடுவோரெல்லாம் கண்டிப்பாகத் தொழ வேண்டிய கோயில் திருநாரையூரில் அமைந்துள்ளது. முக்தியை அருளும் தலம். காசிக்கு நிகரான திருத்தலம். இங்கே சிவனாரின் திருநாமம் சவுந்தரேஸ்வரர். அம்பாள் - திரிபுரசுந்தரி. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருநாரையூர் எனும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் இது. சிவாலயம்தான் என்றாலும் இங்கே உள்ள பிள்ளையார்தான் பிரசித்தம். இவரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார். அதாவது பொள்ளாப் பிள்ளையார். பொள்ளா என்றால் பொளியாத என்று அர்த்தம். பொளியாத என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று அர்த்தம். சுயம்புப் பிள்ளையார் இவர்.
தேவாரத் திருமுறைகள் நமக்குக் கிடைக்கக் காரணம் மாமன்னன் ராஜராஜ சோழன். ராஜராஜனுக்கு அந்தத் திருமுறைகள் இருக்குமிடத்தைக் காட்டியவர் நம்பியாண்டார் நம்பி. அவர் அவதரித்த திருத்தலம் திருநாரையூர். சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம்.
வைகாசி மாதத்தின் திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரமும் குருபூஜையாக, நம்பியாண்டார் நம்பியின் முக்தி தினம் கொண்டாடப்படுகிறது.
கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்த இல்லம் அமைந்துள்ளது. அங்கே சிறிய மண்டபம் எழுப்பப்பட்டு, அதில் சிற்ப ரூபமாகக் காட்சி தருகிறார் நம்பியாண்டார் நம்பி.
இவரின் குருபூஜை மிக எளிமையாக நடைபெற்றது. குருபூஜை ஆராதனை, அன்னதானம் என சிறப்புற கொண்டாடப்பட்டது. பொல்லாப் பிள்ளையாருக்கும் விசேஷ பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
முக்தி தரும் தலம். காசிக்கு நிகரான திருத்தலம். நம்பியாண்டாநம்பி அவதரித்த புண்ணியபூமியை, திருநாரையூரை மனதால் நினைத்துக் கொண்டாலே புண்ணியம் சேரும் என்கிறது ஸ்தல புராணம்.