ஆன்மிகம்

வைகாசி மாதப் பிறப்பில் தர்ப்பணம்; வைகாசி பிறந்தால் வழியும் பிறக்கும்! 

வி. ராம்ஜி

வைகாசி மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபடுங்கள். நம் வம்சம் வாழையடி வாழையென தழைக்கும். இன்னும் இன்னுமாக சந்தோஷமாகவும் அமைதியாகவும் நாம் வாழ அருள்செய்வார்கள் முன்னோர்கள். வைகாசி மாதப் பிறப்பு 14.5.2020 வியாழக்கிழமை. மறக்காமல், பித்ரு ஆராதனை செய்யுங்கள்.
ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். மாத அமாவாசை, கிரகண காலம், மகாளய பட்ச காலங்கள், இறந்தவரின் திதி முதலான நாள் என மொத்தம் 96 தர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


இதில் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். மாதப் பிறப்பில் செய்யும் தர்ப்பணம் என்பது, முன்னோர் ஆராதனை என்பது நம்மை இன்னும் இன்னும் சிறப்பாகவும் செம்மையாகவும் வாழச் செய்யும் என்பது உறுதி.


மாதப் பிறப்பின் போது, அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்கு வைத்து தட்சணையை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரிக்கலாம். எள்ளும் தண்ணீருமாக விட்டு தர்ப்பணம் செய்யலாம். அந்த எள்ளும் தண்ணீரும் இறந்தவரின் தாகம் தீர்க்கும்; பசி போக்கும் என்கிறது சாஸ்திரம்.


மாதப் பிறப்பு நாளில், நம் முன்னோர்களின் திருவுருவப் படங்களுக்கு சந்தனமிட்டு, பூக்கள் வைத்து, நமஸ்கரிக்கவேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான உணவில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாகப் படைத்து வணங்கிப் பிரார்த்திக்கவேண்டும்.


அந்தநாளில், ஐந்துபேருக்கேனும் ஏதேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். இது அக்கினி நட்சத்திர காலம் என்பதால், விசிறி தானமும் செய்யலாம்.
வைகாசி மாதப் பிறப்பு நாளில், முன்னோர்களை நினைத்து வழிபடுங்கள். முன்னோருக்காக தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களுக்கு நைவேத்தியம் செய்த உணவை, காகத்துக்கு வழங்குங்கள். ஐந்துபேருக்கேனும் ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். இதில் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். மகிழ்ந்து ஆசியை வழங்கியருள்வார்கள்.


14.5.2020 வியாழக்கிழமை, வைகாசி மாதப் பிறப்பு. மறக்காமல் தர்ப்பணம் முதலான முன்னோர் ஆராதனையைச் செய்யுங்கள். அன்னதானம் வழங்குங்கள். நம் வம்சம் வாழையடிவாழையென தழைக்கும். சிறக்கும். நம்மை இன்னும் இன்னுமாக சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழ வழிகள் கிடைக்கும் என்பது உறுதி.

SCROLL FOR NEXT