அட்சய திருதியை நன்னாளில், உப்பு வாங்குவதும் உப்பை தானமாக வழங்குவதும் மிகுந்த நற்பலன்களைத் தரும். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். சகல செல்வங்களும் இல்லத்தில் தங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மேலும் தானம் செய்வதும் உணவு வழங்குவதும் உங்கள் வம்சத்தையே வாழ்வாங்கு வாழச் செய்யும். இன்று 26.4.2020 ஞாயிற்றுக்கிழமை, அட்சய திருதியை.
சித்திரை மாத வளர்பிறை காலத்தின் மூன்றாம் நாள் அட்சய திருதியை அனுஷ்டிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் பெருகுதல் என்று அர்த்தம். இந்தநாளில், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவை பன்மடங்காக வளரும் என்பது ஐதீகம்.
அதனால்தான், இந்தநாளில் தானம் செய்யச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். ஒருவர் எப்போது தானம் செய்வார்? தனக்குத் தேவையானதெல்லாம் இருப்பதற்கும் மேலாக பொருட்கள் இருந்தால்,தானம் செய்வார். இந்தநாளில், நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்கினால், பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்கள். பித்ரு சாபம் என்பதும் பித்ரு தோஷம் என்பதும் முழுவதுமாக நீங்கிவிடும் என்பதாக ஐதீகம்.
மேலும் நம் வீட்டு உணவில் மிகப்பெரிய அங்கம் வகிப்பது உப்பு. நாம் என்னதான் சாப்பிட்டாலும், எவ்வளவு வகைவகையான உணவுகளைச் சாப்பிட்டாலும் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்றுதான் பழமொழி அமைந்திருக்கிறது. ஏதேனும் கோபம் சண்டை என்றாலும் ‘உப்புப் போட்டு சாப்பிட்டியா?’ என்றுதான் கேட்போம்.அதேபோல, ‘உப்பிட்டவரை உள்ளளவும் மறக்காதே’ என்று நன்றிக்காகவும் உப்பு சொல்லிவைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, உப்பு என்பது சாதாரணமான பொருள் அல்ல. வெறும் சுவைக்குச் சேர்க்கக்கூடிய பண்டம் அல்ல.
ஆகவே, அட்சய திருதியை நன்னாளில், உப்பு வாங்குவதும் உப்பு தானம் செய்வதும் கோடி பலன்களைத் தரக்கூடியவை. வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வர்யங்களும் வளரும். குடும்பத்தில் இதுவரை இருந்த கஷ்டங்கள், தரித்திரங்கள், துக்கங்கள் அனைத்தும் விலகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வது உறுதி.
‘ஒரு குந்துமணி கூட நகை இல்லையே...’ என்று கலங்கித் தவித்த துயரமெல்லாம் மாறும். வீட்டில் நகை ஆபரணங்கள் சேரும். சகல செளக்கியங்களுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். வெண்ணிற மலர்கள் சூட்டி தெய்வங்களை வணங்குங்கள். உப்பு பாக்கெட்டை சுவாமிக்கு முன்னே வைத்து தீபாராதனை காட்டி, பின்னர் எப்போதும் போல் உப்பு வைக்கும் பாத்திரத்தில், இந்த உப்பையும் சேருங்கள். வளமும் நலமுமாக வாழ்வீர்கள்!