அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம்.
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.
வருகிற 26.04.2020 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை. இந்தநாளில், வீட்டில் விளக்கேற்றி, கிருஷ்ணரின் படங்களுக்கு பூச்சூட்டி வழிபடுங்கள். கண்ணனைக் காண, குசேலர் வந்தபோது, வெறும் கையுடன் செல்லவில்லை. ‘உங்கள் ஸ்நேகிதனைப் பார்க்கப் போகிறீர்கள். இதோ... இதை எடுத்துச் சென்று கொடுங்கள்’ என்று அரிசியைக் குத்தி அவலாக்கினாள் அவன் மனைவி. அதை ஒரு கிழிந்த துணியில் வைத்து கட்டிக்கொடுத்தாள்.
தன் நண்பனைச் சந்தித்து ஆரத்தழுவிக் கொண்ட குசேலர், தன் மனைவி கொடுத்து அனுப்பிய அவலை கண்ணனிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மகிழ்ந்து போனார் கிருஷ்ணர். துணியைப் பிரித்தார். அவலை கையில் எடுத்தார். வாயில் இட்டுக்கொண்டார். அப்போது ‘அட்சய’ என்றார். பிறகு நண்பனிடம் பல விஷயங்களைப் பேசிச் சிரித்தார். பின்னர், அங்கிருந்து கிளம்பிச் சென்றார் குசேலர்.
ஆனால், தன் நண்பனிடம் தன் கஷ்டங்கள் எதையும் சொல்லவில்லை. இதைக் கொடு அதைக் கொடு என்று எதுவும் கேட்கவில்லை. அதேசமயம், வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்கிறோமே என்று தவித்து மருகினார்.
தயங்கித் தயங்கி வீட்டை நெருங்கியவருக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும். அவரின் குடிசை வீடு, அரண்மனை போல் மாறியிருந்தது. உள்ளே நுழைந்தவர் மனைவி குழந்தைகளுக்குக் கண்டு இன்னும் ஆச்சரியப்பட்டுப் போனார். நல்ல நல்ல புத்தாடைகளையும் நகை ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். கிருஷ்ணர் ஒரு பிடி அவலை எடுத்துச் சாப்பிடும்போது, ‘அடசய’ என்று சொன்ன ஒற்றை வார்த்தை, குசேலருக்கு குபேர யோகத்தைத் தந்தது என்கிறது புராணம்.
இப்படியொரு அற்புதம் மிக்க ஐஸ்வர்யங்கள் நிறைந்த நன்னாள், அட்சய திருதியை நாளில்தான்! எனவே, அட்சய திருதியை நாளில், வீட்டில் விளக்கேற்றுங்கள். கிருஷ்ணர் படத்துக்கு பூக்களால் அலங்கரியுங்கள். அன்றைய நாளில், அவல் பாயசம் செய்து, கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள். குடும்ப சகிதமாக எல்லோரும் தீபதூப ஆராதனை காட்டி, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
மேலும் அன்றைய நாளில், நான்குபேருக்காவது தயிர்சாதம் வழங்குங்கள்.
உங்கள் வீட்டில் இருந்த கஷ்டங்களும் கடன் தொல்லைகளும் முற்றிலுமாக நீங்கும். வீட்டின் தரித்திரங்கள் காணாமல் போய், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.