ஆன்மிகம்

கரை புரண்ட பக்தி வெள்ளம்

பாலா

ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம் பக்தி வெள்ளத்தில் மூழ்கியது. கண்ணுக்கெட்டிய வரையில் மக்கள் திரண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப் பெற்ற அரங்கம். மாபெரும் மேடை. சுமார் 6000-7000 பேர் அமரும் வகையில் இருக்கைகள். பெரிய அளவு கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள். இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. சரியாக ஏழு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ‘விட்டல விட்டல விட்டல பாண்டுரங்கா’ என்ற நாமாவளி கணீரென்று ஒலிக்க அரம்பித்தது. விட்டல்தாஸ் மகராஜ் பாடத் தொடங்கினார். மேடையில் அவருடன் இருந்த சீடர்களும், அரங்கில் திரண்டிருந்த பக்தர்களும் அவருடன் இணைந்துகொள்ள, பக்தி வெள்ளம் நாத ரூபத்தில் பாய்ந்து அனைவரையும் ஆட்கொண்டது. மகராஜ் ‘ஆயிரே ரங்கம்மாஜி’ என்ற அபங் பாடலைத் தொடங்கியபோது கூட்டத்தில் இருந்த அனைவரும் ‘ஹோ’ என கோஷமிட்டபடி, பரவசமடைந்தார்கள்.

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஒரு மணி நேரம் நாமாவளி முடிந்த பின், மகராஜின் உரை தொடங்கியது. பக்திப் பரவசத்துடன் முழங்கிய குரல்கள் அமைதியில் உறைந்தன. அனைவரது கவனமும் உரையின் மீது குவிந்தது. பக்தியால் இறைவனைக் கண்ட மராத்திய பக்தர்களைப் பற்றிய உரையை அவர் தொடங்கியபொழுது அரங்கில் பரிபூரண அமைதி. சரியாக ஒன்பது மணிக்கு மங்களம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் மகராஜ். கலைய மனமில்லாமல் கலைந்து சென்றார்கள் பக்தர்கள்.

விட்டல் தாஸ் மகராஜ் பஜனை, உபன்யாசம் ஆகியவற்றோடு நிற்கவில்லை. இவர் ஒரு பெரிய கோயிலையும் கட்டியுள்ளார். இவரது முயற்சியில் உருவான பாண்டுரங்கர் கோயில் இன்று தென்னிந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமான கோவில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோவிந்தபுரம் என்னும் ஊரில் இது அமைந்துள்ளது. நாம ஜபத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்திய போதேந்திரர் அவர்களின் சமாதி இக்கோவிலுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது. பஜனை செய்ததில் கிடைத்த சம்பாவனையைக் கொண்டே கோவில் கட்டுவதற்கான பணத்தில் சுமார் ஐம்பது சதவிகிதம்வரை விட்டல் தாஸ் அளித்தார். மீதித் தொகை பக்தர்களின் நன்கொடையால் கிடைத்தது.

இங்கே நித்ய பூஜை ப்ரேமீக சம்பிரதாயப்படி நடைபெற்றுவருகிறது. காலை 7 மணிக்குள் பெயரைப் பதிவு செய்துகொள்பவர்கள் தினசரி பூஜைகளில் கலந்துகொள்ளலாம். பாண்டுரங்கன், ருக்மிணி விக்ரஹங்களைத் தொட்டுக் கும்பிடலாம். இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினரும் பெருமளவில் இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள்.

இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகவும் மாறிவருவது குறிப்பிடத்தக்கது. திருமணம் நடைபெற வேண்டி இக்கோவிலில் இறைவனுக்கு இரு நல்ல மாலைகளை அர்ப்பணித்தால் அது வெகு சீக்கிரம் கைகூடிவிடுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

கோசாலை

கோவிலை ஒட்டி ஒரு கோசாலையும் அமைந்துள்ளது. சுமார் 200 பசுக்கள் பிருந்தாவனத்திலிருந்தும், துவாரகையிலிருந்தும் கொண்டுவரப்பட்டவை. இன்று இவை 450 பசுக்களாகப் பெருகியுள்ளன. செல்லுமிடமெல்லாம் பக்தியைப் பரப்பும் விட்டல் தாஸ் மகராஜுடன் அவரது இரு மகன்களும் சீடர்களும் மேடையில் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பஜனை மற்றும் உபன்யாசங்கள் செய்யும் அளவிற்குத் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழையடி வாழையாக இந்த மரபு காப்பாற்றப்படும் என்பதற்கான நம்பிக்கையை இது அளிக்கிறது.

SCROLL FOR NEXT