வரலஷ்மி விரதம் ஆகஸ்ட் 28
ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தைக் கூறியதும் மகாலஷ்மி தங்க நெல்லிக்கனியைப் பொன் மழையாய் பொழிந்தாள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீவேதாந்த தேசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கிய மகாலட்சுமி அப்பொழுதும் பொன்மழை பொழிந்ததாக ஐதீகம். அஷ்டலஷ்மிகள் அளிக்கும் அனைத்தையும் தான் ஒருத்தியாக மட்டுமே அளிக்கக்கூடியவள் வரலஷ்மி. இவளே வித்யா லஷ்மி, வீர லஷ்மி, அன்ன லஷ்மி, திருமடப்பள்ளி நாச்சியார், மோட்ச லஷ்மி, கோலபுர நாயகி, மகுட லஷ்மி, குபேர லஷ்மி, தீப லஷ்மி எனப் பல திருநாமங்கள் கொண்டவள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அளிப்பவர்கள் அஷ்டலஷ்மிகள் என்பது நடைமுறை நம்பிக்கை.
ஆதிலஷ்மி
திருப்பாற்கடலை கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள் என்பதால் இவளுக்கு ஆதிலஷ்மி என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஆதிலஷ்மியை வணங்குவதால் உடல் நலம் பெறலாம்.
தான்யலஷ்மி
தானியம் எனப்படும் பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், பழ வகைகள், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலஷ்மி. பசிப் பிணி போக்குபவள்.
தைரியலஷ்மி
வாழ்வில் இன்னல்கள் மூலம் மனத் தைரியத்தை இழந்தவர்கள் தைரியலஷ்மியை வணங்கினால் மனோதைரியம் பெறலாம்.
கஜலஷ்மி
கஜம் என்ற யானைகள் இருபுறமும் கலசம் ஏந்தித் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்வதுபோல அமைந்திருப்பதால் கஜலஷ்மி என்ற காரணச் சிறப்புப் பெயர் ஏற்பட்டது என்பர். கஜ லஷ்மியைப் பூஜித்து அனைத்து வகைச் செல்வங்களையும் பெறலாம்.
சந்தானலஷ்மி
சந்தானம் என்பது மழலைச் செல்வத்தைக் குறிப்பது. குழந்தை வரத்தை அளிப்பதனால் சந்தான லஷ்மி என்பது திருப்பெயர். பித்ரு தோஷத்தை நீக்குபவள்.
விஜயலஷ்மி
வெற்றியை அருளுபவள் விஜய லஷ்மி. எடுத்த காரியம் யாவினும் வெற்றியைத் தரும் விஜயலஷ்மிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தொழிலில் வெற்றி தருபவள் விஜயலஷ்மி.
வித்யாலஷ்மி
கல்விச் செல்வத்தை வழங்குவதால் இவளுக்கு வித்யா லஷ்மி என்று பெயர். கல்வி, வித்தைகளில் சிறக்க, வித்யா லஷ்மியை வணங்கலாம்.
தனலஷ்மி
தனம் என்ற செல்வ வளத்தை அளிப்பவள் தனலஷ்மி. வறுமையைப் போக்கும் குணவதி. இந்த அனைத்து செல்வங்களையும் அருளும் குணங்களைக் கொண்டவள் வரலஷ்மி.
இந்த எட்டு லஷ்மிகளும், வெள்ளிச் சொம்பில் அச்சு பதிக்கப்பட்டு இருப்பார்கள். வரலஷ்மிக்குப் பூஜை செய்யும் பொழுது, இயல்பாக இவர்களுக்கும் அப்பூஜை சேர்ந்துவிடும்.
மாமியார் எடுத்துக் கொடுக்க, மருமகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டிய பூஜை. பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இதனைச் செய்து வந்திருப்பார்கள். பல குடும்பங்களில் இந்த வழக்கமின்றியும் இருக்கும். பெண்கள் பிறந்த வீட்டில் பூஜை உண்டு, புகுந்த வீட்டில் இப்பூஜை வழக்கத்தில் இல்லை என்று வருந்துவதும் உண்டு. பிறந்த வீட்டில் இல்லை புகுந்த வீட்டில் உண்டு என்று மகிழ்பவரும் உண்டு. எது, எப்படி இருந்தாலும் பெண்ணின் பிறந்த வீட்டினரே, தாயார் திருமுகம் வாங்கி பெண்ணிற்குச் சீராக அளிக்க வேண்டும் என்பது வழி வழியாகக் கடைபிடிக்கப்படும் பழக்கம்.
தாயார் முகமாக வந்த வரலாறு சுவையானதுதான். தன்னை வரலஷ்மியாக வைத்து பூஜிக்கக் கூறி தனது பக்தையின் கனவில் வந்தாள் தாயார். அக்காலத்தில் சாணியை கொண்டு இல்லம் மெழுகுதல் வழக்கம். தன்னை விட்டுத் தாயார் என்றும் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்கள் இல்லச் சுவற்றில், அழகிய சொம்பு ஒன்றினை ஓவியமாக வரைந்து அதன் மேல் அப்படியே தாயார் முகம் வரைவார்கள். இதனையே வெள்ளிக்கிழமைதோறும் பூஜித்தும் வந்தார்கள். ஆண்டுதோறும் புதுப்பிப்பார்கள். இதனை வீட்டிலுள்ள சுமங்கலிப் பெண்களே அவரவர்கள் குல வழக்கப்படி உள்ள ஆடைகளை அணிந்துகொண்டு வர்ணம் பூசுவார்கள்.
பொற்கொல்லர்கள் அழகிய, கருணை சொரியும் தாயார் முகங்களை, அச்சு செய்து வார்த்தெடுத்தார்கள். இவையே இன்றைய பழக்கத்தில் உள்ள திருமுகம்.
எப்படி வழிபடுவது?
அழகிய, தூய்மையான தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும்.
கலசத்தின் அகன்ற வாய்ப் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் வெள்ளி அல்லது தங்கத் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு அமைக்க வேண்டும்.
திருமுகத்துக்குப் பொட்டிட்டு, அதில் ஜொலிக்கும் ஆபரணக் கற்களைப் பதிக்கலாம். இந்த திருமுகத்துக்குப் பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். திருமுகத்துக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உட்பட நகைகளை தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.
வரலஷ்மி விரதத்திற்கு முதல் நாளான வியாழன் இரவே இந்தத் தாயாரைத் தயார் செய்துவிட வேண்டும். ஒரு வருட காலமாகப் பூஜை அறையில் பெட்டிக்குள் இந்தத் தாயார், கண் திறக்கும் நேரத்தில் நிவேதனம் செய்ய வேண்டும். முன்னதாக வெண்பொங்கல் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை தட்டில் வைத்து, தீபாராதனை, ஆரத்தி போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துவிட வேண்டும்.
புதிய கண் மை எடுத்துத் தாயார் திருமுக மண்டலத்தில் உள்ள அவளது கண்களுக்கு இட வேண்டும். இதனையே தாயார் கண் திறத்தல் என்று சொல்வார்கள். உடனடியாக வெண்பொங்கல் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்துவிட வேண்டும். பின்னர் இந்தப் பிரசாதத்தையே நோம்பு நோற்கும் இல்லத்துப் பெண்கள் சாப்பிட வேண்டும். வழிபாட்டு முறையை அவரவர்கள் குல வழக்கப்படியும் செய்யலாம்.
மறு நாள் விடியற்காலை, வெள்ளிக்கிழமை, விரத நாளன்று தயாரித்து வைத்துள்ள தாயாரை இல்லத்திற்குள் வருமாறு அழைக்க வேண்டும். பக்கத்திற்கு ஒருவராக இரு சுமங்கலிப் பெண்கள் அலங்கரித்து வைத்துள்ள தாயாரைத் தாம்பாளத்துடன் தூக்கி வந்து முன்னதாகத் தயாரிக்கப்பட்ட சிறிய மண்டபத்தினுள் வைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் இருபுறமும் வாழைகன்றுகளை கட்டி, மாவிலை, தென்னை இலைத் தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத்திற்கும் மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
முதலில் வினாயகர் பூஜையைச் செய்துவிட்டு பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். நோம்பு சரடிற்குத் தனியாகப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு தாயாருக்குப் பருப்பு பாயசம், தேங்காய் மற்றும் உளுந்து கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலை பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு நோன்புச் சரடை வலது கையில் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் கட்டிக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்துவது ஸ்ரீவரலட்சுமி பூஜை என்பது ஐதீகம்.