ஆன்மிகம்

கண்ணொளி அருளும் செங்கழுநீர் அம்மன்

ஜி.விக்னேஷ்

பார்வை ஒவ்வொரு மனிதனுக்கும் வரப்பிரசாதம். இதில் குறைபாடு ஏற்பட்டால், அதனை நிவர்த்திக் கலாம் என்ற நம்பிக் கையை அருள்பவள் செங்கழுநீர் அம்மன். இந்த அம்மன் கோயில் கொண்டிருப்பது, பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள வீராம் பட்டினம் என்ற கடற்கரை கிராமத்தில். இந்த அம்மன் இங்கு வந்ததும் ஒரு ஆச்சரிய நிகழ்வுதான்.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீராம்பட்டினத்தில் வசித்துவந்த வீரராகவன் என்பவர் மீன்பிடி தொழில் செய்துவந்தார். ஒரு நாள் அருகில் இருந்த செங்கழுநீர் ஓடையில் மீன் பிடிக்க வலை வீசினார். வலையை இழுக்க மிகுந்த கனமாக இருந்திருக்கிறது. பெரிய மீன்தான் சிக்கியதோ என்று எண்ணி சிலரின் உதவியுடன் இழுத்துப் பார்க்க, அதில் உருளை வடிவில் மரத்துண்டு இருந்திருக்கிறது. ஏமாற்றமடைந்த அவர், அம்மரத்துண்டைத் தன் இல்லத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டார்.

சில நாட்கள் கழித்து அடுப்பெரிக்க விறகு தேவைப்பட்டது. வலையில் சிக்கிய மரத்துண்டைக் கோடாரியால் பிளக்க, ரத்தம் பீறிட்டதாம். பதறிய வீரராகவன் அம்மரத்துண்டுக்கு பொட்டிட்டு, பூச்சூடி பூஜித்துவந்துள்ளார். அவரது கனவில் வந்த பெண் தெய்வம், தான் ரேணுகா என்றும், இவ்வூரில் கோயில் கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தாராம். தனது சிலாரூபத்தின் பீடமாக இந்த மரக்கட்டையை வைத்து கோயில் எழுப்புமாறு கூறினாளாம் கனவில் வந்த அம்மன்.

இதனை அறிந்த மக்கள் அதற்கான இடம் தேடி ஊருக்குள் அலைய, பாம்பு ஒன்று மூன்று முறை தரையில் கொத்திக் காட்டிச் செல்ல அங்கேயே அம்மனுக்குக் கோயில் எழுந்தது என்கிறது தல புராணம். இந்தக் கோயில் நாயகியான செங்கழுநீர் அம்மனை வேண்ட, இடையில் தொலைந்த கண் பார்வை மீண்டு விடுவதாக பக்தர்கள் நம்பிக்கைக் கொண்டு இங்கு தரிசனம் செய்ய இன்றும் வருகின்றனர்.

SCROLL FOR NEXT