ஆன்மிகம்

யுகாதி பிறப்பில் வாசலில் விளக்கு; உலக நன்மைக்கு பிரார்த்தனை

செய்திப்பிரிவு


யுகாதி பிறப்பு என்று தெலுங்கு வருடப்பிறப்பைச் சொல்லுவார்கள். சைத்ர மாதத்தின் முதல் நாள் என்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நாள் என்றும் இந்தநாளைச் சொல்லுவார்கள். முக்கியமாக, படைப்புக் கடவுளான பிரம்மா, இந்தநாளில்தான் உலகையும் மனிதர்களையும் படைத்தார் என விவரிக்கிறது பிரம்ம புராணம்.


நாளைய தினம் 25.03.2020 யுகாதிப் பிறப்பு. இந்தப் புனித நாளில், தெலுங்கு மற்றூம் கன்னடம் பேசுவோர் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி, இறைவனைப் பிரார்த்தனை செய்வார்கள்.


இந்த நாளில், புது முயற்சிகளை மேற்கொள்ளும் நாளாகவும் கொண்டாடுகிறார்கள்.


யுகாதி பிறப்பில், வீடுகளைச் சுத்தம் செய்வார்கள். அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடுவார்கள். யுகாதி பச்சடி செய்து உணவில் சேர்ப்பது இந்தப் பண்டிகையின் சிறப்பம்சம்.


எந்தவொரு நற்காரியத்தையும் இந்தநாளில் தொடங்கினால், அது தங்குதடையின்றி வெற்றியைத் தேடித்தரும் என்பது மக்களின் நம்பிக்கை.
உலகெங்கும் ’கரோனா வைரஸ்’ மிகப்பெரிய பயங்கரத்தை நிகழ்த்தி வரும் வேளையில், உலக நன்மைக்காகவும் உலக மக்களின் நன்மைக்காகவும் ‘கரோனா’வில் இருந்து அனைவரும் மீள்வதற்காக பிரார்த்தனை செய்தால், விரைவில் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


பிரம்மதேவன், உலகைப் படைத்த நாள் யுகாதி என்று பிரம்மபுராணம் விவரிக்கிறது. எனவே, படைப்பினங்கள், நலமுடன் வாழ காலை சூரியோதயத்திலும் மாலையில் அந்திசாயும் வேளையிலும் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றினால், விளக்கேற்றி பிரார்த்தனை செய்துகொண்டால், உலக க்ஷேமம் நடைபெறும். உலக மக்கள் எந்த அச்சமோ பீதியோ இல்லாமல் வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
யுகாதிப் பிறப்பான நாளைய தினத்தில் (25.03.2020) உலக நன்மைக்காக, உலக மக்களுக்காக வீட்டு வாசலில் விளக்கேற்றி பிரார்த்திப்போம்.

SCROLL FOR NEXT