விவிலிய ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளின்படி ரோமாபுரி தேசத்தின் ஒரு பகுதியாக இருந்த யூதேயாவை (கிமு 40-4) 30 ஆண்டு காலம் அரசாண்ட மன்னன் முதலாம் ஏரோது. எருசலேம் தேவாலயத்தைக் கட்டியவன் இவனே. இவனது மரணத்துக்குப் பிறகு கிபி 7-ல் யூதேயாவின் ஆட்சியுரிமையைக் கைப்பற்றியவன் முதலாம் ஏரோதின் இளைய மகனாகிய ஏரோது அந்திப்பா. இவனே இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூத அரசன். தனது 54 வயதுவரை(கிபி 44) வரை வாழ்ந்த இவனது இழிவான வாழ்க்கை குறித்து விவிலியம் கூறுவதைப் பாருங்கள்.
பிறன்மனை கவர்ந்தோன்
மாற்கு புத்தகத்தில் அதிகாரம் ஆறில் தொடங்கி ஏரோது அந்திப்பாவின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்த தீர்க்கதரிசியும் இயேசுவுக்கு முன்னோடியும் இறை ஊழியருமான ‘திருமுழுக்கு யோவானை’ சிறையி லடைத்து, பிறகு அவரது தலையை வெட்டிக் கொன்றவன் இவனே. இவனைக் குறித்து மாற்கு ஆறாம் அத்தியாயத்தில் இப்படி விவரிக்கிறார்.
“இவனது காலத்தில் இயேசு தன் போதனைகளாலும் அற்புதங்களாலும் பிரபலமடைந்தார். இயேசுவைப் பற்றிய பேச்சு ஏரோது அந்திப்பாவின் காதுக்கும் எட்டியது; சிலர், “யோவான் ஸ்நானகர்தான் உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்; அதனால் தான் இவரால் அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று பேசிக்கொண்டார்கள். இன்னும் சிலர், “இவர் எலியா” என்றார்கள். வேறு சிலரோ, “மற்ற தீர்க்கதரிசிகளைப் போல் இவரும் ஒரு தீர்க்கதரிசி” என்றார்கள். ஆனால் ஏரோது இதைக் கேள்விப் பட்டபோது, “இவர் யோவான்தான்! இவர் தலையை நான் வெட்டினேன்; இப்போதோ உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்” என்று சொன்னான்.
இந்த ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன் மனைவியாக ஆக்கிக்கொண்டான். அதனால் பாவத்தை விடுத்து மனம் திரும்பும்படி யூதர்களுக்கு அழைப்புவிடுத்த யோவான், “நீர் உம் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல” என்று பலமுறை அவனிடம் சொல்லியிருந்தார். யோவான் அரசனைக் கண்டித்தது யூதர்கள் மத்தியில் செய்தியாகப் பரவியது. இதில் கோபம் கொண்ட ஏரோதியாள் அவனைச் சிறைபிடித்துத் துன்புறுத்துமாறு அரசனை வற்புறுத்தினாள். தன் மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காக, ஏரோது அந்திப்பா ஆள் அனுப்பி யோவானைப் பிடித்து விலங்கிட்டுச் சிறையில் தள்ளியிருந்தான். அப்படியும் யோவான்மேல் ஏரோதியாளுக்கு இருந்த குரோதம் குறையவில்லை. அவரைக் கொல்லத் துடித்தாள், ஆனால் முடியவில்லை.
ஏனென்றால், அவர் நீதிமான் என்றும், பரிசுத்தமானவர் என்றும் ஏரோது அறிந்து, அவருக்குப் பயந்து, அவரைப் பாதுகாத்து வந்திருந்தான். யோவான் பேசுவதைக் கேட்டபோதெல்லாம் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் குழம்பிப்போயிருந்தான்; என்றாலும், அவர் பேசுவதை எப்போதும் விருப்பத்தோடு கேட்டு வந்திருந்தான்.
கொலை பாதகம்
ஆனால், ஏரோது தன் பிறந்த நாளன்று உயர் அதிகாரிகளுக்கும் படைத் தளபதிகளுக்கும் கலிலேயாவிலிருந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் விருந்தளித்தான். அப்போது, ஏரோதியாளுக்குச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது ஏரோதியாள் தன் மகளை அரசன் உள்ளிட்ட விருந்தினர் கூடியிருந்த அவையில் நடனமாடச் செய்து ஏரோதுவையும் அவருடைய விருந்தினரையும் மனங்குளிரச் செய்தாள். அரசன் அந்தக் கன்னிப் பெண்ணிடம், “என்ன வேண்டுமானாலும் கேள், நான் உனக்குத் தருகிறேன்” என்றான். “நீ என்ன கேட்டாலும் தருகிறேன்” என்று ஆணையிட்டுக் கொடுத்தான்.
அவள் தன் தாயிடம் போய், “நான் என்ன கேட்பது?” என்றாள். அதற்கு அவள், “ திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள். உடனே அந்தப் பெண் வேகமாக ராஜாவிடம் போய், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். அதைக் கேட்டு ராஜா மிகவும் துக்கமடைந்தான்; ஆனால், தன் ஆணையிட்டு சத்தியம் செய்து கொடுத்ததன் காரணமாகவும் அங்கே குழுமியிருந்து முக்கிய விருந்தினர்கள் பார்த்துக் கொண்டிருப்பதன் காரணமாகவும் அவளுக்கு அதை அவன் மறுக்க விரும்பவில்லை.
அதனால் உடனடியாகத் தன் மெய்க்காவலனை அனுப்பி அவருடைய தலையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அந்தக் காவலன் போய், சிறையிலிருந்த யோவான் ஸ்நானகரின் தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் எடுத்துவந்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்; அவள் அதைத் தன் தாயிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். திருமுழுக்கு யோவான் சீடர்கள் துயரத்தைக் கேள்விப்பட்டுப்போய், அவரது உடலை வாங்கிவந்து ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
நாம் நாமாக இருக்கிறோமா?
நாம் நாமாகப் பல நேரங்களில் இருப்பதில்லை. அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி, அல்லது அளவுக்கு அதிகமான கோபம் ஆகியவற்றில் நாம் திளைத்துவிடுகிறோம் என்றால் நமக்குள் இருப்பது நம்மை ஆட்சிசெய்வது தீயவனாகிய சாத்தான் என்பதைத் தயக்கமில்லாமல் உணர வேண்டும். ஏனெனில் அதிக மகிழ்ச்சியின்போதும் அதிகக் கோபத்தின்போதும் எந்தவொரு முக்கியமான முடிவையும் நாம் எடுக்கக் கூடாது என்று விவிலியம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. இந்த இரண்டு நிலைகளும் சாத்தானின் பிடியில் இருப்பதால் எது நல்லது எது கெட்டது என்று சரியாக நமக்கு விளங்காது. எனவே இந்த நிலைகளில் நாம் எடுக்கும் முடிவு மற்றவர்களைக் கடுமையாகப் பாதிக்கலாம். அப்படி எடுக்கும் முடிவுகள் மூலம் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளலாம்.
ஏரோது அந்திப்பாவும் தான் களித்திருந்த சூழ்நிலையில், தன் சத்தியம் குறித்து, சூழ்ந்திருந்த உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்ற தற்பெருமை காரணமாகவே முட்டாள் தனமான வாக்குறுதியை அளித்தான். அதனால் நீதிமானாக இருந்த மக்கள் மதித்துவந்த ஒரு தீர்க்கதரிசியின் உயிரைத் தன் மனைவியின் மகளுக்குப் பரிசாக அளித்தான். அவனைப் போல் இல்லாவிட்டாலும் பல நேரங்களில் யோசிக்காமல் நாம் எடுத்த முடிவுகள் நமக்கு நெருக்கமான பலரைப் பாதித்திருக்கலாம். நமக்கு அறிமுகமில்லாதவர்களையும் பாதித்திருக்கலாம். ஏரோதின் வாழ்க்கை யிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுவே.