ஆன்மிகம்

ஆன்மிக வாசிப்பு: கனவுகளைப் பின்தொடர்வோம்!

என்.கெளரி

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பின்தொடர்வதற்கான ஒரு வாழ்க்கைக் கனவு ஒன்று இருக்கும். ஆனால், அந்தக் கனவைப் பின்தொடர்வதற்கான துணிவு எல்லோருக்கும் வாய்த்துவிடாது. வாழ்க்கைக் கனவை அடையாளம் காண்பது என்பதே சவாலானதுதான். எவனொருவன் ஆன்மாவின் அழைப்புக்குச் செவிசாய்க்கிறானோ, அவனால்தான் வாழ்க்கையின் கனவை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆன்மாவின் அழைப்பு என்றால் என்ன? அது கடவுளின் ஆசீர்வாதம். இந்தப் பூமியில் கடவுள் நமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை என்றும் அதைச் சொல்லாம். எந்தவொரு செயலைச் செய்யும்போது நம்மை மட்டற்ற உற்சாகம் தொற்றிக்கொள்கிறதோ, அப்போது நம் கனவைப் பின்தொடர்கிறோம் என்று அர்த்தம். ஆனால், நம்மிடம் அந்தக் கனவை எதிர்கொள்வதற்கான துணிச்சல் இருப்பதில்லை. ஏனென்றால், அதற்குத் தடையாக நான்கு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, சிறு வயதிலிருந்தே நாம் ஒரு செயலை மனதார விரும்பிச் செய்ய நினைக்கும்போது, அது சாத்தியமற்றது என்று சொல்லக் கேட்டுத்தான் வளர்கிறோம்.

இந்தத் தடையை மீறி, நம் கனவை அடையாளம் கண்டுபிடித்துவிட்டாலும், நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது தடை, அன்பு. நம்முடைய கனவைப் பின்தொடர்வதால் எங்கே அன்புக்குரியவர்களைக் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதிப் பேர் கனவைப் பின்தொடராமல் விட்டுவிடுகிறோம். மூன்றாவது தடை, கனவுகளைப் பின்தொடரும்போது ஏற்படும் தோல்விகள். கனவு மெய்ப்படுவதைப் பற்றிய பயம், கனவை நனவாக்குவதற்கான நம் தகுதி குறித்த குற்றவுணர்வை நான்காவது தடையாகச் சொல்லலாம். இப்படி, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கனவுகளைப் பின்தொடராமல் இருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

ஆன்மாவின் அழைப்புக்கு ஏன் செவி சாய்க்க வேண்டும்? வாழ்க்கைக் கனவை ஏன் அடையாளம் காண வேண்டும்? அதை ஏன் பின்தொடர வேண்டும்? நம் கனவுகளுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? - இது போன்ற கேள்விகளுக்கு நம்மில் பெரும்பாலானவர்களிடம் பதில் இருக்காது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கிறது ‘தி ஆல்கெமிஸ்ட்’ நாவல். போர்த்துகீசிய எழுத்தாளர் பவுலோ கோய்லோ 1988-ல் எழுதிய இந்த நாவல், இதுவரை எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பதினைந்து கோடிக்கும் மேல் விற்பனையாகியிருக்கிறது. தமிழில் ‘ரஸவாதி’ என்னும் பெயரில் வெளியாகியிருக்கிறது.

தி ஆல்கெமிஸ்ட்’, ஆன்மாவின் அழைப்புக்குச் செவிசாய்த்து, வாழ்க்கைக் கனவை முழு வேட்கையுடன் பின்தொடர்ந்து வெற்றியடையும் சண்ட்யாகோ என்னும் ஆடு மேய்க்கும் இளைஞனின் கதை. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான அண்டலுசியாவில் வசிக்கும் அவனுக்குப் பயணங்களின் மீது காதல். அதற்காகவே ஆடுமேய்ப்பவனாக மாறுகிறான். அண்டலுசியாவின் எல்லா நகரங்களும் அவனுக்கு நல்ல பரிச்சயம். ஒருநாள், எகிப்து பிரமிடுகள் அமைந்திருக்கும் இடத்துக்குச் சென்றால் அவனுக்குப் புதையல் கிடைப்பதைப் போன்ற கனவு வருகிறது. அதே கனவு அவனுக்குத் திரும்பத் திரும்ப வருகிறது.

அந்தக் கனவை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் சண்ட்யாகோ, கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் வயதான ‘ஜிப்சி’யைச் சந்திக்கிறான். அதற்குப் பிறகு, சலேம் ராஜாவைச் சந்திக்கிறான். “நீ ஏதாவது ஒன்றை விரும்பினால், அதை அடைவதற்கு மொத்தப் பிரபஞ்சமும் உனக்கு உதவி செய்யும்” என்று சண்ட்யாகோவிடம் சொல்கிறார் சலேம் ராஜா. இவர்கள் இருவரும் சண்ட்யாகோவிடம் கனவைப் பின்தொடரச் சொல்கிறார்கள்.

அவனுடைய உள்ளுணர்வும் அவனைக் கனவைப் பின்தொடரச் சொல்லி வலியுறுத்துகிறது. அந்த உள்ளுணர்வை நம்பி அவனும் தன் ஆடுகளை விற்றுவிட்டு, அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்பிரிக்காவின் டாஞ்சர் துறைமுகத்துக்கு வருகிறான். ஆனால், எதிர்பாராத விதமாக அவனுடைய மொத்தப் பணமும் திருடுபோய்விடுகிறது. இந்தக் கட்டத்தில், சண்ட்யாகோவுக்கு உதவி செய்யும் பளிங்குக் கடை முதலாளி இந்தக் கனவையெல்லாம் மறந்துவிட்டுச் சொந்தநாட்டுக்குத் திரும்பச் சொல்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகப் பளிங்குக் கடையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ஆடுகள் வாங்கிக்கொண்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பச் செல்ல நினைக்கிறான் சண்ட்யாகோ.

ஆனால், சலேம் ராஜாவின் வார்த்தைகள் அவனுடைய நினைவுக்கு வருகின்றன. கனவுகளைப் பின்தொடர்வதற்கு மீண்டும் ஆயத்தமாகிறான் சண்ட்யாகோ. எகிப்து பயணத்தைத் தொடங்குகிறான். பயணத்தின்போது ஆப்பிரிக்கப் பாலைவனச் சோலையில், சண்ட்யாகோ ஃபாத்திமா என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அங்கே ஒரு ரசவாதியைச் சந்திக்கிறான். ரசவாதி சாண்ட்யாகோவுக்குக் கனவைப் பின்தொடர உதவிசெய்கிறான். “நீ ஏதாவது ஒன்றை விரும்பினால், அதை அடைவதற்கு மொத்தப் பிரபஞ்சமும் உனக்கு உதவி செய்யும்” என்பது சாண்ட்யாகோ வாழ்க்கையில் உண்மையாகிறது.

இந்த நாவல், மனிதர்கள் வாழ்க்கையில் கனவு, காதல், உள்ளுணர்வைப் பின்தொடர்வதன் ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. பூமியில் பிறந்த அனைவரும் ஏன் கனவுகளைப் பின்தொடர வேண்டும் என்பதற்கான விடையை அளிக்கிறது பவுலோ கோய்லோவின் இந்நாவல்.

SCROLL FOR NEXT