சென்னை வடபழநி முருகன் கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்க இருக்கின்றன. முன்னதாக, கோயிலில் பாலாலயம் செய்யப்படுகிறது. 11ம் தேதியான இன்றும் 12ம் தேதி வியாழக்கிழமையும் பாலாலயம் நடைபெறுகிறது.
சென்னையின் மையப்பகுதியான வடபழநியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முருகன் கோயில். சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட இந்த ஆலயத்துக்கு, சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துத் தரிசித்துச் செல்கின்றனர். வியாபாரம், திரைத்துறை என பலதுறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இஷ்டதெய்மமாகத் திகழ்கிறது வடபழநி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.
ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, மற்றும் முருகப்பெருமானுக்கு உரிய விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வடபழநி முருகனைத் தரிசித்துச் செல்வார்கள். சுமார் 130 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோயில் இது.
கோடம்பாக்கம், வடபழநி முதலான பகுதிகள் இப்போது போல் இல்லை. அந்தக் காலத்தில், வயலும் வரப்பும் சூழ, அழகிய கிராமமாக இருந்தது. அந்த ஊரில் வசித்து வந்த அண்ணாசாமி நாயக்கர் என்பவர், தீராத வயிற்றுவலியால் கலங்கித் தவித்து வந்தார். மிகுந்த முருக பக்தரான இவர், தன் வயிற்று வலி தீர முருகப்பெருமானிடம் மனமுருகிப் பிரார்த்தித்தார்.
தெற்கே உள்ள பழநியம்பதி என்றும் ஆவினன்குடி என்றும் போற்றப்படுகிற பழநி தண்டாயுதபாணியிடம் மெய்யுருக வேண்டிக்கொண்டார். அங்கே, சந்நியாசி ஒருவர், ‘முருகப்பனை விட்டுடாதே. கெட்டியாப் பிடிச்சுக்கோ. எல்லாம் சரியாயிரும்’ என்று சொல்ல... ஊருக்குத் திரும்பினார்.
வயிற்று வலியில் இருந்து மீண்டார்.
ஊரின் ஒரு பகுதியில், முருகப்பெருமான் திருவுருவப் படத்தை வைத்து வணங்கி வழிபடத் தொடங்கினார். அந்தப் பகுதி மக்களும் வழிபடத் தொடங்கினார்கள். சிறியதொரு ஓலைக் கொட்டகையில் முருக வழிபாடு இப்படித்தான் தொடங்கியது. பின்னர், கொஞ்சம்கொஞ்சமாக கட்டடம் எழுப்பப்பட்டது. சந்நிதிகள் அமைக்கப்பட்டன. தெற்கே உள்ள பழநியை நினைவுபடுத்தும் விதமாக, வடபழநி என இந்தப் பகுதி வழங்கப்பட்டது.
பின்னர், வடபழநியும் பிரபலமாயிற்று. வடபழநியில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் கருணையும் அருளும் பிரசித்தமாயிற்று. 1920-ம் ஆண்டில் கோயில், புதுப்பிக்கப்பட்டது. விரிவுபடுத்தப்பட்டது. 72-ம் ஆண்டில், கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
கருவறையில், தனக்கே உரிய அழகுடன் பேரழகுடன் காட்சி தந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.
செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள்தான். இங்கே நவக்கிரகத்தில் அமைந்துள்ள செவ்வாய் பகவான், தனிச்சந்நிதியில் அமைந்து அருள்பாலிக்கிறார்.
கோயிலுக்கு திருக்குளமும் உள்ளது. அங்கே, வருடந்தோறும் தெப்போத்ஸவத் திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது.
வருடந்தோறும் திருவிழாக்கள், எப்போதும் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் என்று பக்தர்கள் வருகை என அருள் கோலோச்சுகிற வடபழநி முருகன் கோயிலுக்குக் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, பாலாலயம் செய்யவேண்டும் எனும் ஆகமவிதிப்படி, இன்றும் (11-ம் தேதி) நாளை வியாழக்கிழமையும் பாலாலயப் பணிகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
அதன் பின்னர், கோயிலில் திருப்பணிகள், கோயிலைப் பொலிவுபடுத்தும் வேலைகள் நடக்க இருக்கின்றன.
இன்று புதன்கிழமை 11ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது பாலாலய பூஜைகள். பின்னர், பிரதிஷ்டா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை யாகசாலை பூஜைகளும் 12-ம் தேதியான நாளைய தினம் (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜைகளும் நடைபெறுகின்றன.
பாலாலய பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஆதிமூலம், துணை ஆணையர் சித்ராதேவி மற்றும் ஆலய ஊழியர்கள் செய்துவருகின்றனர்.