வி.ராம்ஜி
சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. சூரியனாருக்கு உகந்த நாள் ரதசப்தமி. 1.2.2020 சனிக்கிழமை ரத சப்தமி. எனவே இந்தநாளில், மறக்காமல் சூரிய வழிபாடு செய்வோம். வாழ்வில் சுபிட்சத்தைப் பெறுவோம்.
சூரிய பகவானுக்கு, நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது விசேஷம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.
ரத சப்தமி நன்னாள். சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். ரதசப்தமி நாளில் (நாளைய தினம்) காலை எருக்க இலையை தலையில் வைத்துக் கொண்டு நீராடச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எருக்க இலையுடன், கொஞ்சம் பசுஞ்சாணம், மஞ்சள் கலந்த அட்சதை கொண்டு குளிக்கவேண்டும். அப்போது இந்த மந்திரத்தைச் சொல்லி ஸ்நானம் செய்யவேண்டும்.
பிறகு, சூரியனுக்கு இரு உள்ளங்கையையும் சேர்த்து அர்க்யம் தரவும். அதாவது
தண்ணீர் விடவேண்டும்.
ரத ஸப்தமி ஸ்நான அர்க்ய மந்திரம்.
ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்
யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ
நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய
குளித்து முடித்து, துவைத்த ஆடையை உடுத்திக் கொண்டு, நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்யவேண்டும். ’ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே’ என்று சொல்லி இந்த மந்திரத்தையும் சொல்லி, நீரால் சூர்ய பகவானுக்கு அர்க்யம் விட வேண்டும்.
அந்த மந்திரம் இதுதான்...
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே
திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்.
*******************************************