ஆன்மிகம்

ஒரு தயிர்சாதப் பொட்டலம்... தை அமாவாசை தானம்! 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


கடல் குளியல் எல்லா காலத்திலும் செய்யக் கூடாது எனத் தெரிவிக்கின்றன சாஸ்திர நூல்கள். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கடல் நீராடுவது உத்தமம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தை அமாவாசை எனப்படும் புண்ய காலத்தில், புனிதமான நாளில், கடலில் ஸ்நானம் செய்வது விசேஷ பலன்களைத் தந்தருளும்!


ராமேஸ்வரம் கடல், திருப்புல்லாணி சேதுக்கரை, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் திருக்கடல்மல்லை முதலான சமுத்திரத்தில் நீராடினால், இதுவரை முன்னோருக்கு கடன் தீர்க்காத பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவோம். முன்னோரின் ஆத்மா குளிர்ந்து, நம்மை, நம் குடும்பத்தை, நம் சந்ததியை ஆசீர்வதிக்கும் என்பது ஐதீகம்.


தை மாத அமாவாசையில், கடல் நீராடுங்கள். கடற்கரையில் தர்ப்பணம் செய்யுங்கள். இயலாதவர்கள், காவிரிக்கரைகளில், பவானி கூடுதுறை, திருவையாறு காவிரிக்கரை முதலான புண்ணிய நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்யுங்கள்! குளக்கரையில் தர்ப்பணம் செய்யுங்கள். எல்லா வளமும் நலமும் பெற்று, தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷமாக வாழ்வீர்கள்!


அதேபோல், தானம் செய்வதற்கு, தருமங்கள் செய்வதற்கு நாளும் கோளும் அவசியமில்லை. என்றாலும் முக்கியமான நாட்களில், புண்ணியம் நிறைந்த நன்னாளில், விசேஷமானது என்று கொண்டாடப்படுகிற திருநாளில், நம்மால் முடிந்த தானம் செய்வது, நம் வாழ்வின் தடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்க்கும். நமக்கு மனோபலம் பெருகும்.


அமாவாசை நாளில், வேதம் அறிந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் பசு தானம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். எள் தானம் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சொர்ணம் எனப்படும் தங்கத்தை தானமாகத் தரலாம். ஆலயங்களுக்கோ ஆச்சார்யர்களுக்கோ நெய் வழங்கலாம். வஸ்திரம் கொடுக்கலாம். நவதானியங்கள், வெல்லம், வெள்ளி, உப்பு, புத்தகம், பூஜைக்குப் பயன்படுத்தப்படும் மணி, தீர்த்தப் பாத்திரங்கள், பழங்கள், காய்கறிகள் முதலானவற்றை தானமாக வழங்கலாம்.


நம்மால் முடிந்த தானங்களைக் கொடுத்து, முன்னோரை நினைத்து பிரார்த்திப்போம். வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம். சகல தோஷங்களிலிருந்தும் விடுபடுவோம்!

SCROLL FOR NEXT