வி.ராம்ஜி
தை அமாவாசையில், முன்னோரை நினைத்து ஆராதனை செய்வதும் அவர்களை வணங்கி பூஜைகள் மேற்கொள்வதும் தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரும். பாவங்கள் நீங்கும். பித்ரு முதலான சாபங்கள் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். நாளை 24.1.2020 வெள்ளிக்கிழமை, தை அமாவாசை.
மாதந்தோறும் அமாவாசை எனும் புண்ணிய தினம் வரும். இந்தத் திதியானது ரொம்பவே விசேஷம். முன்னோருக்கான நாள் இது. இந்த நாளில், முன்னோரை வணங்கி ஆராதிப்பதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை.
ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும்.
இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும்.
இதுவே புண்ணியம்! குறிப்பாக, நீர்நிலைகளில் இருந்தபடி தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டைச் செய்வது கூடுதல் சிறப்பு. மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அதாவது, புண்ணிய நதிகளில் நீராடி, நதிக்கரை, ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் பித்ரு வழிபாடு செய்தால், இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.
வடக்கே கங்கை, யமுனை, கோதாவரி போல், காவிரிக்கரை, காவிரியின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரை, திருவையாறு, மயிலாடுதுறை, கும்பகோணம் காவிரிக்கரை, கரூர், ஈரோடு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி, வல்லநாடு தசாவதாரக் கட்டம், சென்னை மயிலாப்பூர், கடற்கரைப் பகுதி முதலான இடங்களில் தர்ப்பணம் செய்து வழிபடலாம். ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வந்து தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளைச் செய்வார்கள்.
மேலும் இந்தநாளில், முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம்.
நாளை 24.1.2020 வெள்ளிக்கிழமை தை அமாவாசை புண்ணிய தினம். இந்தநாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
இதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி!