ஆன்மிகம்

திருத்தலம் அறிமுகம்: தொலைந்ததை மீட்ட நாதமுனிகள்- சொர்க்கப்பள்ளம்

குள.சண்முகசுந்தரம்

காணாமல் போயிருந்த நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்தவர் நாதமுனிகள். அதனால், அவரது திருவரசு அமைந்திருக்கும் இடத்தை பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் திருத்தலமாக மக்கள் போற்றுகின்றனர்.

நம்மாழ்வார் தந்த நாலாயிர திவ்யபிரபந்தத்தை இசையுடன் கலந்த முத்தமிழ் வேதமாக தொகுத்தவர் நாதமுனிகள். இவருக்கு நம்மாழ்வார் திவ்யபிரந்தங்களை அருளிய கதை எப்படித் தெரியுமா?

பெருமாளே கதியென்று கிடந்தவர்

காட்டுமன்னார்குடியில் அவதரித்த அவதார திருமகன் நாதமுனிகள். சிறுவயதிலேயே பெருமாள் மீது பற்று கொண்ட இவர், காட்டுமன்னார் கோயிலில் உள்ள  வீரநாராயண பெருமாளே கதி எனக் கிடந்தார். ஒரு சமயம் தென் திசையிலிருந்து இங்கு வந்திருந்த வைணவர்கள், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் குறித்து நம்மாழ்வார் பாடிய பத்துப் பாசுரங்களை இசையுடன் கலந்து (அரையர் சேவை) பாடினர்.

‘ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்’ என்று அவர்கள் பாசுரங்களை முடித்த போது அருளிசையில் மயங்கி நின்ற நாதமுனிகள், ‘’ஐயா.. பத்துப் பாசுரங் களை கேட்டதே இவ்வளவு ஆனந்தமாய் உள்ளதே மொத்தமாய் ஆயிரத்தையும் பாடக் கூடாதா?’’ என்று கேட்டார். அதற்கு அவர்களோ “தாமிரபரணிக் கரையில் திருக்குருகூரில் வசிக்கும் நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்கும் தான் அத்தனையும் தெரியும்” என்றனர்.

பராங்குசதாசனைத் தேடி தாமிரபரணிக் கரைக்குப் போனார் நாத முனிகள். அவரோ, “எல்லாம் மகான் நம்மாழ்வாருக்குத்தானே தெரியும்” என்றார். அப்போதும் மனம் தளராத நாதமுனிகள், “அந்த மகானை எப்படிக் காண்பது?’’ என்றார். ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தடியில் தான் அந்த மகான் மோட்சமான இடம் உள்ளது. அங்கு சென்று, நம்மாழ்வாருக்காக மதுரகவி ஆழ்வார் பாடிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு..’ என்ற பாசுரத்தை பன்னிரெண்டாயிரம் முறைகள் பாடினால் நம்மாழ்வார் காட்சி கொடுப்பாரென்று உபாயம் சொன்னார்.

அதன்படியே, அங்கு சென்று பன்னிரெண்டாயிரம் முறை அந்தப் பாசுரத்தைப் பாடினார் நாதமுனிகள். அப்போதே அவருக்குக் காட்சி கொடுத்த நம்மாழ்வார், “ஆயிரமென்ன.. நாலாயிரமும் உமக்குத் தந்தோம்” என்று சொல்லி நாலாயிரம் திவ்யப் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்கு அருளினார். அவர் படிக்கப் படிக்க அவை அனைத்தையும் ஒன்றாக நாதமுனி தொகுத்ததாகக் கூறப்படுகிறது.

ராமபிரானின் வருகை

ஒருமுறை அவரது இல்லத்திற்கு ராமன், சீதா பிராட்டியார் லட்சுமணர் மூவரும் வேடுவர் வேடமணிந்து குரங்குடன் (ஹனுமன் சென்றனர். அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் நாத முனிகள். தியானத்தைக் கலைக்க விரும்பாத நால்வரும் வந்த வழியே திரும்புகிறார்கள். தியானத்திலிருந்து எழுந்தவரிடம் நால்வர் வந்த விவரத்தைச் சொல்கிறார் அவரது மகள் அரவிந்தப்பாவை.

வந்தது எம்பெருமான் என்பதை அறிந்து பதறித் துடிக்கிறார் நாத முனிகள். அவர்கள் போன திசையில் ஓடுகிறார். அப்போது ஓரிடத்தில் பூ விழுந்து கிடக்கிறது. இது சீதா தேவியின் பூ என்று கண்டுகொள்கிறார் நாத முனிகள். அதுதான் இப்போது, பூவிழுந்த நல்லூர். சற்று தொலைவு சென்ற பிறகு குரங்கடித் தடம் பார்க்கிறார். அதுதான் இப்போது குறுங்குடி. இன்னும் சற்றுத் தொலைவில், தனக்கு எதிரே வந்த மக்களைப் பார்த்து, இந்த வழியாக வேடுவனும் வேடுவச்சியும் போவதைக் கண் டீர் களா? என்று கேட்கிறார். கண்டோம் என்றனர் மக்கள். அதுதான் இப்போது கண்டமங்கலம். கடைசிவரை அவர்களை நாதமுனிகள் காணமுடியவில்லை.

பெருமாள் காட்சி கொடுத்த இடம்

கவலையோடு, இப்போதைய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகேயுள்ள சொர்க்கப்பள்ளத்துக்கு வந்தவர், அங்கிருந்த காட்டில் விழுந்து புரண்டு அழுதார். அப்போதுதான் அவருக்குப் பெருமாள் காட்சி கொடுத்தார். அந்த ஆனந்தத்திலேயே முக்தி அடைந்தார் நாத முனிகள். அவரது சீடர்கள் ஆறு பேரும் அவரை அந்த இடத்திலேயே அடக்கம் செய்து திருவரசு எழுப்பினர். பக்கத்திலேயே பெருமாளுக்கும் சிலை வைத்தார்கள்.

காலச்சுழற்சியில் இந்த இடம் தனது அடையாளத்தைத் தொலைத்து அத்தனையும் மண்ணுக்குள் புதையுண்டு போனது. அதற்குப் பிறகு புலவர் அரிதாசன் என்பவர் இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்தபோது தேவியருடன் ஆள் உயர பெருமாள் சிலை ஒன்று பாதியளவுக்கு மண்ணுக்குள் புதையுண்டிருந்ததைப் பார்த்தார். அதற்குப் பிறகுதான், இப்போது சொர்க்கப்பள்ளத்தில் அமைந்திருக்கும்  னிவாச பெருமாள் - நாதமுனிகள் ஆலயமும் நாதமுனிகளின் திருவரசும் எழுப்பப்பட்டது.

நாத முனிகள் அவதரித்த ஆனி அனுஷ நட்சத்திரத்தன்று இங்கே சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைகள் நடக்கும். நாதமுனிகளுக்காக  ரங்கத்திலிருந்து மாலை மரியாதைகள் அனுப்பி வைக்கப்படும். நாத முனிகளுக்கு ராமபிரான் காட்சி கொடுத்த மாசி வளர் பிறை ஏகாதசி அன்று இங்கே ஊஞ்சல் சேவை நடக்கும். அப்போது திவ்யதேசங்களிலிருந்து வரும் பாகவதர்கள், ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரத்தை பன்னிரெண்டாயிரம் முறை இசையுடன் கலந்து பாடுவார்கள்.

அனைத்து ஜீயர்களும் இங்கே வந்து தரிசனம் செய்திருக்கிறார்கள். இங்கு வந்து வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியம் கைகூடும். குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கும் குழந்தை பாக்கியம் கிட்டும். அது மாத்திரமல்ல.. காணாமல் கிடந்த நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை தேடிக் கண்டுபிடித்து தொகுத்த நாத முனிகள் குடிகொண்டிருக்கும் கோயில் என்பதால், நீண்ட நாட்களாகப் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேரவும் காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கவும் இங்கே வேண்டுதல் வைத்தால் எல்லாம் சுபமாகும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

படங்கள்: குள.சண்முகசுந்தரம்.

SCROLL FOR NEXT