ஆடிக்கடைவெள்ளி தீமிதி உற்சவம்
நாகை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒருங்கிணைந்து கொண்டாடும் மிகப் பெரிய விழாவென மாதானம் முத்துமாரியம்மன் ஆலயத் தீமிதித் திருவிழாவைச் சொல்லலாம். சீர்காழிக்கு அருகேயுள்ள மிகச் சிறிய கிராமமான மாதானத்தில் விண்ணரசி மாரியம்மன் குடியிருக்கிறார்.
ஆடி மாதம் கடைவெள்ளியில் நடக்கும் தீமிதி உற்சவத்துக்காக அதிலிருந்து பத்து நாட்களுக்கு முன்னதாக வரும் புதன் கிழமையில் காப்பு கப்பட்டப்பட்டு உற்சவம் தொடங்குகிறது, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்மன் வீதியுலாவோடு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடி கடைவெள்ளியில் தீமிதி விழா. ஆடவர், பெண்டிர், குழந்தைகள், முதியவர், வசதி படைத்தோர், ஏழைகள் என்று எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்குவார்கள். அதனைக் காணவும், அன்னையை வழிபடவும் அன்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு திரளுவர்.
சுயம்பு மாரியம்மன்
இங்குள்ள முத்துமாரியம்மன் சுயம்புவாக வெளிப்பட்டவள். பிரம்பங்காடாக இருந்த இப்பகுதியில் தான் இருப்பதை இரு சம்பவங்களால் மக்களுக்கு வெளிப்படுத்தினாள் அன்னை. மாதானத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது மரச் செக்கினைப் பழுதுபார்க்க வெளியூர் சென்று புளியமரத்தின் நடுப்பகுதி ஒன்றை வாங்கி வந்து வீட்டருகே போட்டிருந்தார்.
ஒருநாள் இரவு அவரது கனவில் தோன்றிய பெண்ணுருவம் அந்தப் புளிய மரத்துண்டு தனக்கு வேண்டும் என்று கேட்டு மறைந்தது. அதனால் ஆச்சரியமடைந்த வணிகர் காலையில் மரத்துண்டைப் போய்ப் பார்க்க வேரற்ற நடுத்துண்டான அது துளிர் விட்டிருப்பதைக் கண்டு வியந்தார். வேர் எதுவும் உள்ளதா என்று மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தபோது சிதிலமடைந்த நிலையில் மாரியம்மன் சிலை கிடைத்தது.
இதற்கிடையே ஊர்ப் பெரியவர் ஒருவரது கணவில் வந்த அம்மன் தான் பிரம்புக் காட்டில் இருப்பதாக சொல்ல, மக்கள் அனைவரும் பிரம்புக் காட்டிற்கு வந்து தேட, அங்கு அழகான மாரியம்மன் சிலை கிடைத்தது. அதனைக் கண்டு பக்தி வயப்பட்ட மக்கள் அந்த இடத்திலேயே அம்மனுக்குக் கொட்டகை அமைத்துக் கோயிலாக வழிபட்டனர். அதற்கு எதிரேதான் வணிகர் கொண்டு வந்திருந்த மரத்துண்டு துளிர்த்து மரமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் கீழேயே அவர் கண்டெடுத்த மாரியம்மனும் வீற்றிருக்கிறாள்.
கற்றளியாக உருவான கோயில்
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த அதிசயம் மக்களிடையே பரவி அன்னை முத்துமாரியம்மன் கீர்த்தியும் வேகமாகப் பரவியது. அதனால் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமத்து மக்களுக்கும் இவள் இஷ்ட தெய்வமானாள். கோயிலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கற்றளியாக உருவெடுத்து, தற்போது கலைநயமிக்கதாக அமைந்துள்ளது.
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அன்னையின் சன்னதியைச் சுற்றிவந்தால் அவர்கள் குணமாக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மை நோயின் தாக்குதல் இந்த அன்னையின் பார்வையால் குணமாக்கப்படுகிறது.
தலவிருட்சம் புளியமரம்
கண் நோய் அகல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துவதும், வேண்டுதல் நிறைவேற மாவிளக்குப் போடுவதும் இங்கு நேர்த்திக் கடன். குழந்தை இல்லாதவர்கள் மரத்தொட்டிலையும், திருமணம் வேண்டி பெண்கள் மஞ்சள் கயிற்றையும் ஆலயத்தின் தல விருட்சமான புளிய மரத்தில் கட்டுகின்றனர். இதனால் வேண்டுதல் பலிக்குமென்று பக்தர்கள் கூறுகின்றனர்.
கருவறையின் உள்ளே சாந்த சொரூபமாக நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள் அன்னை முத்து மாரியம்மன். மேலிரு கரங்களிலும் சூலம், டமுருகம், கீழிரு கரங்களிலும் கத்தியும், கபாலமும் கொண்டு தன்னை நாடி வருகிறவர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி அவர்களை வாழ்க்கையில் புதிதாகத் துளிர்விட்டுப் பிரகாசிக்க வைக்கிறாள்.