வி.ராம்ஜி
சிதம்பரம் என்றாலே ரகசியம் நினைவுக்கு வரும். ரகசியம் என்றதும் அதற்குள் இருக்கிற ஆச்சரியங்கள் எட்டிப்பார்க்கும். அவ்வளவு மகத்துவம் கொண்டது தில்லை என்கிறார்கள், பக்தர்கள்.
தில்லை எனும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் தில்லையம்பதி என அழைக்கப்பட்டது. இப்போது சிதம்பரம் என்றால்தான் தெரியும்.
புலிக்கால் முனிவர் என்ற வியாக்ரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொடங்கி, இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகிறான்.
இரண்டு முனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை எனப்படுகிறது. இதுவே ’திருச்சிற்றம்பலம்’ என்பதாக விவரிக்கின்றன புராணங்கள். இங்குதான் நடராஜர் எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. சிறு & அம்பலம் என்பதே சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- என்றால் வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் விவரிக்கிறது!
அந்த ஆன்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் என்றால் சிறுமை. ஆகாயம் என்பது வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக ச் சொல்கிறது ஸ்தல புராணம்!
ஆடல்வல்லானின் சபையில், சித்சபையில் அற்புதமாகக் காட்சி தரும் ஆனந்தக்கூத்தனை தரிசித்து உய்வோம்.
சிதம்பரம் மட்டுமின்றி, பல ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா, வெகு விமரிசையாக நடைபெறும். நாளை 10.1.2020 வெள்ளிக்கிழமை, திருவாதிரைத் திருநாள். இந்தநாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, ஆடல்வல்லானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கண்ணாரத் தரிசனம் செய்யுங்கள்.
ஆடல்வல்லானே சரணம்!
**************************