வி.ராம்ஜி
வைகுண்ட ஏகாதசி நாளில், சொர்க்கவாசல் தரிசனமும் பெருமாளை ஸேவித்தலும் மிக மிக விசேஷம். இந்தநாளில், பெருமாளை தரிசனம் செய்யுங்கள். மோட்சம் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழைமையான கோயில் ஸ்ரீரங்கம் என்கிறார்கள் பெரியோர்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு. முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூரும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஸ்ரீரங்கத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவத் தலம் இது. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது முதலாவது திவ்ய தேசம்.
மோட்சம் தரும் திருத்தலம் இது. இங்கு வந்து பெருமாளை வணங்குவதே நம் பிறவிப்பயன் என்கிறது ஸ்தல புராணம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கவும் விவசாயம் செழிக்கவும் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
சுவாமிக்கு வெண்ணெய் சார்த்துதல், குங்குமப்பொடி சார்த்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தனக் குழம்பு அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
வைகுண்ட ஏகாதசியில், நம்மால் எதுவெல்லாம் செய்யமுடியுமோ, அந்தத் தானங்களைச் செய்வோம். தர்மங்களைச் செய்வோம். வாழ்வில் இதுவரை இருந்த கஷ்டமெல்லாம் விலகும். துக்கமெல்லாம் நீங்கும். இழந்ததெல்லாம் கிடைக்கும். சகல சம்பத்துகளும் கிடைத்து இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி!