ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசியில்... திருவாய்மொழி! 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


வைகுண்ட ஏகாதசியில், பெருமாளை ஸேவியுங்கள். சொர்க்க வாசல் திறப்பு, விடிய விடிய கண் விழித்தல் என மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறச் செய்து, கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நீக்கி அருள்வார் பெருமாள். சுக்லபட்ச ஏகாதசியான நாளைய தினம் (6.1.2020) பரமபத வாசல் திறப்பு.


திருமங்கையாழ்வார் காலத்தில், நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் மட்டுமே விழா எடுத்தனர். அதற்காக திருமங்கையாழ்வார் நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்தனர்.


திருவிழாவின்போது அவர்களது பாடல்களை ‘அரையர் சேவை’யாக நடத்தினர். ‘அரையர்’ என்ற சொல் முத்தமிழ் வித்தகரைக் குறிக்கும். ‘அத்யயன உற்ஸவம்’ என்பது ‘முத்தமிழ் விழா’ என்றே சொல்லலாம்!


இப்போது திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் இராப் பத்து எனவும் கொண்டாடப்படுகிறது.


பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் இடையே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி ஓதி இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சி நடைபெறும். ஆக, திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்த அத்யயனத் திருவிழாவின் நடுநாயக நாளாக அமைவதே வைகுண்ட ஏகாதசி!


தாம் வைகுந்தம் புகுந்த செய்தியை ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் பாடலில், அழகுற விளக்குகிறார்.


வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்த தமர் என்று எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே


என்று ‘திருவாய்மொழி’யாக்கி உள்ளார். ஆகவே, அதற்கு அடிப்படையான ஏகாதசி நாளை, வைகுந்த ஏகாதசியாகக் கொண்டாடி, அரங்கனின் அருளைப் பெறுகிறோம் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

SCROLL FOR NEXT