ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி... அத்யயனத் திருவிழா! 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

வைகுண்ட ஏகாதசியில், அத்யயனத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். பெருமாள் கோயில்களில், காலையும் மாலையும் சிறப்பு பூஜைகளும் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்களும் நடைபெறும்.


ஆழ்வார்கள் காலத்துக்கு முன் வேதப் பயிற்சிக்கு ‘அத்யயன காலம்’ என்றும் ஓய்வு காலத்துக்கு ‘அநத்யாயன காலம்’ என்றும் வடமொழியில் வழங்கி வந்துள்ளனர். வேத நெறியையொட்டி தென்மொழி மறைவாணர்களும் வேதப்பயிற்சி, விடுமுறை (ஓய்வு கால) வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.


ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னர் ஸ்ரீரங்கம் கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று வடமொழியில் மறைகளை செவிமடுத்து, பரமபத வாயில் திறப்பு விழாவை நடத்தி வந்ததாகவும் நாளடைவில் அந்த வழக்கம் நலிவுற்றதாகவும், அதை ஈடு செய்ய தமிழ் வேதங்களை அரங்கன் செவிமடுக்க... இப்போதைய ‘அரையர் சேவை’ ஏற்பட்டதாகவும் தெரிகிறது.


திருமங்கை மன்னன் காலத்துக்குப் பின் இந்த அத்யயனத் திருவிழா வழக்கொழிந்தது. நாலாயிரமும் இடைக் காலத்தில் மறைந்தது. பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காட்டுமன்னார் கோவிலில் தோன்றிய நாதமுனிகள் பெரும் தவமியற்றி, யோக நெறியில் நின்று நம்மாழ்வாரிடமிருந்து மறைந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் பெற்று, இசையமைத்து, தாளம் வழங்கி ‘முத்தமிழ்’ ஆக்கி நாடெங்கும் பரவச் செய்தார். வைணவர்கள் அறிய வேண்டிய முக்கிய மந்திரங்களை மனதில் கொண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தை முறைப்படுத்தி, தொகுத்து அளித்தார்.


நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இவருக்கு ஐந்து சிஷ்யர்கள். அவர்களில் ஒப்பற்ற சிஷ்யராகவும், புகழ்பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய பகவத் ராமானுஜரோடு இணைந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் பல்லாயிரம் மக்கள் அரங்கனோடு இணைந்து அனுபவிக்கும் வகையில் இந்த ‘அத்யயன’ உற்ஸவத்தை ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அமைத்தனர். அப்போது திருமங்கையாழ்வாரை நினைவுகூர்ந்து சிறப்பிக்க அவரது திருநெடுந்தாண்டகத்தை முதன்மைப்படுத்தினார்கள்!


இந்த வைகுண்ட ஏகாதசியில், பெருமாளை ஸேவியுங்கள். சகல சுபிட்சங்களும் தந்தருள்வார் எம் பெருமாள்!

SCROLL FOR NEXT