வி.ராம்ஜி
சிவபெருமானைப் வணங்கக் கூடிய, வழிபடக் கூடிய முக்கியமான விரதங்களில் சோம வார விரதமும் ஒன்று. சோம வாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கட்கிழமை என்பது சந்திரனுக்கு உரிய நாள்!
க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான் என்கிறது புராணம். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனுடைய ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் பெற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் என்பது விசேஷம்.
அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சோமவார விரதம் வருடம் முழுவதும் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. ஆனாலும் கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்பு மிக்கவை.
இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா விமரிசையாக நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்த நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டு செய்கிற காட்சி சிலிர்க்க வைக்கும்!
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி, வெண்பட்டாடை அணிவித்து வழிபட்டால், ஆயுள் பலம் பெருகும். விருத்தி அடையும். மன அமைதி கிட்டும். வம்சம் தழைத்தோங்கும்!
கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்!