இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னுள் உள்ளடக்கியது அரையர் சேவை எனப்படும் அரையர் ஆட்டம். தமிழகத்தில் ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ வில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் இருக்கும் திருத்தலங்களில் பெருமாளுக்கு முன்பாக நிகழ்த்தப்படும் கலை வடிவம் இது.
அரையர் சேவை நடக்கும் காலம்
ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும் 20 நாட்களுக்கு இந்த அரையர் சேவை நடக்கும். பாசுரங்களுக்கு உரிய அர்த்தங்களை விளக்குவதால் `திருஅத்யன உத்சவம்’ என்றும் அரையர் சேவையை அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.
அரையர் சேவையின் தொடக்கம்
இந்த ஆன்மிக வைபவத்தைத் தொடங்கிய பெருமைக்கு உரியவர் திருமங்கை ஆழ்வார். இவரைத் தொடர்ந்து இந்த வைபவத்தை விரிவுபடுத்திய பெருமைக்கு உரியவர் நாதமுனிகள். இவர் தமது மருமகன்களாகிய கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் இருவருக்கும் இசையுடன் தெய்வீகப் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார். இவர்கள் பிரபந்தப் பாடல்களை பெருமாள் வீதிவலம் வரும்பொழுது பாடினர். இவர்களுக்குப் பின் ஆளவந்தாரின் மகனான “திருவரங்கத்துப் பெருமாள் அரையர்' என்பவர் இத்துடன் நடனத்தையும் சேர்த்து இதனை வளர்த்தார். இந்தப் பரம்பரையினர் அரையர் எனப்படுகின்றனர்.
அரையர் சேவையின் சிறப்பு
எந்த விதமான பொருளாதார உதவிகளையும் எதிர்நோக்காமல் செய்யப்படும் இந்தத் திருப்பணியின்போது அரையர்கள் பகட்டான ஆடைகள் எதுவும் அணிய மாட்டார்கள். மேடை இருக்காது. இறைவனின் முன்பாகப் பிரபந்தப் பாடல்களைப் பாடி நடிப்பர். தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாயை அரையர்கள் அணிந்திருப்பர்.
தாளங்களாக நம்மாழ்வாரும் நாதமுனியும்
கலச வடிவில் இந்தக் குல்லாயுடன் பொருத்தப்பட்டிருக்கும் பித்தளை குமிழ்கள் காதுகளை மறைக்கும் வகையில் இருபுறமும் தொங்கும். குல்லாயில் தென்கலை திருமண் காப்பும், சங்கு, சக்கரமும் இருக்கும். இதனை அரையர்கள் மட்டுமே அணிவர். இந்த அரையர் ஆட்டத்தினை ஆண்கள் மட்டுமே ஆடுவர். ஆட்டத்தின்போது வெண்கலத் தாளங்கள் பயன்படுத்தப்படும். இதில் ஒரு தாளத்தை நம்மாழ்வாராகவும் இன்னொரு தாளத்தை நாதமுனியாகவும் கருதுவது ஐதீகம். இரு தாளங்களின் ஒலியின் பின்னணியோடுதான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
தொடரும் கொண்டாட்டம்
பெருமாளிடம் இருந்து அரையர் சேவைக்கான அனுமதி கிடைத்த பிறகே ஆட்டத்தைத் தொடங்குவது ஐதீகம். இதற்கு `அருளப்பாடு’ என்றே பெயர். `நாயிந்தே’ என்னும் வார்த்தையைக் கூறி அரையர் சேவை தொடங்கும். பெருமாளின் பெருமைகளைப் போற்றிப் பாடும் `கொண்டாட்டம்’, பாசுரங்களுக்கு விளக்கம், அதற்கான அபிநயம் என மூன்று பகுதிகளாக அரையர் சேவை நடக்கும். இதன்பின் வியாக்கியானம் முடிந்ததும் மறுபடியும் கொண்டாட்டம் நடக்கும்.
அரையர் சேவையால் கிடைத்த ஸ்ரீ ரங்க நிருத்யம்
புகழ்பெற்ற நடனமணியான உஷா நாராயணன், அரையர் சேவை கைங்கர்யத்தில் இருக்கும் மேன்மையையும் நுணுக்கங்களையும் அடியொட்டி `ஸ்ரீ ரங்க நிருத்யம்’ என்னும் புதிய நாட்டிய வடிவத்தினை ஏற்படுத்தினார். இதற்கு சங்கீத நாடக அகாடமியின் நிதி உதவியும் அவருக்குக் கிடைத்தது.