வி.ராம்ஜி
புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் நாளைய தினம் (18.10.19) வெள்ளிக்கிழமை பிறக்கிறது. தர்ப்பணம் செய்து பித்ருக்களை ஆராதனை செய்ய மறக்காதீர்கள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்யச் சொல்லுகிறது சாஸ்திரம். அதேபோல், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோர்களை வழிபட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கியமாக, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களை வழிபடவேண்டும். அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்க வேண்டும் என்கிறார்கள்.
நாளைய தினம் 18.10.19 வெள்ளிக்கிழமை ஐப்பசி மாதம் பிறப்பு. புரட்டாசி மாதம் இன்றுடன் முடிகிறது. நாளைய தினம் ஐப்பசி மாதம் பிறக்கிறது.
இந்த நாளில், வீட்டைச் சுத்தப்படுத்துங்கள். பூஜையறையைச் சுத்தப்படுத்துங்கள். முன்னோர்களின் படங்கள், இறந்துவிட்ட நம் தாய், தந்தையரின் படங்களை சுத்தம் செய்யுங்கள். படங்களுக்கு பூக்கள் அணிவியுங்கள். முடிந்தால், துளசி மாலை சார்த்துவது ரொம்பவே விசேஷம்.
இந்தநாளில், தர்ப்பணம் செய்யவேண்டும். எள்ளும் தண்ணீரும் விட்டு முன்னோரை வணங்கவேண்டும். ஆச்சார்யர்களுக்கு வெற்றிலை, பாக்கு, அரிசி, வாழைக்காய் கொடுத்து தட்சணையும் வழங்கி நமஸ்கரிக்க வேண்டும்.
முக்கியமாக, காகத்துக்கு உணவிடுங்கள். காகம் நம் முன்னோர்களின் மறுவடிவம் என்கிறது சாஸ்திரம். அதேபோல், நான்குபேருக்காவது நம் முன்னோர்களை மனதில் நினைத்து, உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
இந்தச் செயல்களால், நம் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதித்து அருளுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.