ஆன்மிகம்

இன்று குரு வார சங்கடஹர சதுர்த்தி; நம் சங்கடங்கள் தீர ஆனைமுகன் வழிபாடு! 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


குரு வார சங்கடஹர சதுர்த்தி இன்று. இந்தநாளில், நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைக்கும் ஆனைமுகனை வழிபடுவோம்.
சதுர்த்தி என்பதே பிள்ளையாருக்கு உகந்த அற்புத நன்னாள். ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தியை விநாயக சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். அதேபோல் மாதந்தோறும் சதுர்த்தி என்பது வரும். அந்த சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று போற்றுகிறோம்.


சங்கட ஹர சதுர்த்தி என்பது விநாயகருக்கு உரிய அற்புதமான நாள். இந்தநாளில், ஆலயங்களில்,விநாயகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


மாலையில் கணபதி பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வீட்டில், விளக்கேற்றி, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடலாம். சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலானவற்றை நைவேத்தியம் செய்யலாம். பின்னர் அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி மகிழலாம்.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துவது எப்படி விசேஷமோ, அதேபோல் வெள்ளெருக்கு மாலை அணிவித்து வேண்டிக்கொள்வதும் சிறப்பு வாய்ந்தது.


இன்று 17.10.19 வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. வியாழக்கிழமை என்பதால், குரு வார சங்கடஹர சதுர்த்தி. இந்த குரு வார சங்கடஹர சதுர்த்தியில், விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அல்லது பால் பாயசம் அல்லது அவல் பாயசம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக் வழங்குங்கள்.
நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.

SCROLL FOR NEXT