வி.ராம்ஜி
சிவாலயங்களில், குரு தட்சிணாமூர்த்தியை கோஷ்டத்தில் தரிசிக்கலாம். அதேபோல், நவகிரகங்களில் ஒரு கிரகமாக குரு பகவான் காட்சி தருவார். அவரையும் தரிசித்து வலம் வந்து வழிபடலாம். சில ஆலயங்களில், நவக்கிரக குரு பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தந்தருள்வார். ஆனால் ஒரே கோயிலில், ஏழு குரு சந்நிதி அமைந்திருப்பதை அறிவீர்களா?
திருச்சி உத்தமர்கோவில், உன்னதமான திருத்தலம் என்பதை அறிவோம். இங்கே எந்தக் கோயிலிலும் இல்லாத வகையாக, ஏழு குருவின் சந்நிதி அமைந்திருக்கிறது.
உத்தமர் கோயிலின் முதல் சிறப்பம்சம் என்ன தெரியுமா? சிவா, விஷ்ணு, பெருமாள் மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. இப்படி மும்மூர்த்திகளும் மூர்த்தமாக இருந்து, கோயில் கொண்டு, அருளாட்சி செய்யும் தலம் மிகவும் அரிது என்பது குறிப்பிடத் தக்கது.
திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில், பழைய சமயபுரம் டோல்கேட் பகுதி உள்ளது. இங்கிருந்து நொச்சியம் செல்லும் பாதையில், மேம்பாலத்துக் கீழ்ப்பகுதியில் அமைந்து உள்ளது உத்தமர்கோவில் திருத்தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர்கோவில்.
இங்கே... இந்தத் தலத்தின் இன்னொரு முக்கியமானச் சிறப்பு... சப்த குரு ஸ்தலம் இது. அதாவது ஏழு குருவும் கோலோச்சுகிற பூமி இது.
அதாவது, தேவகுரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்கிராச்சார்யர், ஞான குரு ஸ்ரீசுப்ரமணியர், படைப்புக் கடவுளான ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு குருவாக ஸ்ரீவரதராஜர், சிவ குருவாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சக்தி குருவெனக் காட்சி தரும் ஸ்ரீசௌந்தர்ய நாயகி ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே தலத்தில், ஒரே கோயிலில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
குரு பகவானின் அதிதேவதை ஸ்ரீபிரம்மா என்பது குறிப்பிடத்தக்கது. சப்த குருவும் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு வந்து, அவர்களைக் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மந்த புத்தி விலகும். காரியத் தடைகள் அனைத்தும் அகலும். நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். குரு தோஷம் நீங்கும். குரு பலத்துடன் திகழ்வீர்கள்.
வியாழக்கிழமைகளில், குருவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குருப்பெயர்ச்சியின் போது, சிறப்பு ஹோமங்களும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சப்த குரு ஸ்தலத்துக்குச் சென்று சப்த குருவையும் வணங்குங்கள். சந்தோஷமான வாழ்க்கை நிச்சயம்!