சூரியன் மெல்ல வானிலிருந்து எட்டிப் பார்த்தான். சூரியனின் கிரணங்கள் உலகைச் சூடாக்கின. பல மாதங்களாக இல்லாதிருந்த வெம்மை உலகின் சகல மூலை முடுக்குகளையும் ஆசுவாசப்படுத்தியது.
பல நாட்கள் இரவும் பகலும் ஓயாமல் அடித்திருந்த மழை ஓய்ந்தது. உலகையே மூழ்கவைத்த மகா பிரளயம் முடிவுக்கு வந்தது. பிரளயத்திலிருந்து தப்பிக்க சில ஜீவராசிகளுடன் மாபெரும் கப்பலில் ஏறி உயிரைக் காப்பாற்றிக்கொண்ட நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் வெளியே வந்தார்கள்.
நோவா பூமியைப் பார்த்தான். கடலைப் பார்த்தான். மண்ணையும் விண்ணையும் பார்த்தான். தங்கள் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றிப் பெருக்குடன் காணிக்கையைச் செலுத்தினான்.
தன்னுடைய குடும்பத்தை, மனித இனத்தை அந்தப் பிரம்மாண்டமான பிரளயத்திலிருந்து காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தவே நோவா காணிக்கை செலுத்தினான்.
நோவாவின் காணிக்கையை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார். “இனி ஒருபோதும் ஜலப் பிரளயத்தால் மறுபடியும் இந்த உலகத்தை அழிக்க மாட்டேன்” என்று அவர் நோவாவுக்கு வாக்குக் கொடுத்தார்.
நிலத்திலிருந்து தண்ணீர் விரைவாக வற்றியது. மண்ணும் நீரும் பிரிந்தன. உயிர்கள் வாழ இடம் கிடைத்தது. நோவாவும் அவருடைய குடும்பமும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
நோவா மீண்டும் கடவுளைத் தொழுது வணங்கினான். நன்றி சொன்னான். கடவுள் அவனை ஆசீர்வதித்தார். “நீங்கள் நிறைய பிள்ளைகளைப் பெற வேண்டும். பூமி முழுவதும் மக்களால் நிரம்பும்வரை நீங்கள் எண்ணிக்கையில் பெருக வேண்டும்” என்றார்.
நோவாவின் மனம் மகிழ்ச்சியால் தளும்பியது. உலகையே உலுக்கிய ஜலப் பிரளயம் இன்மேல் வராது என்று ஆண்டவர் உறுதி கொடுத்துவிட்டார். ஆனால் இந்தப் பிரளயத்தைப் பற்றி மக்கள் பிற்பாடு கேள்விப்பட்டால் அவர்கள் அது மீண்டும் வந்துவிடுமோ என்று அவர்கள் ஒருவேளை பயப்படலாம். எனவே இந்த பூமியைத் தாம் மீண்டும் ஜலப் பிரளயத்தில் மூழ்கடிக்கப் போவதில்லை என்று தான் கொடுத்த வாக்கை நினைவுபடுத்தும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் கடவுள்.
மழை பெய்து ஓய்ந்து பளிச்சென்றிருந்த அந்த வானில் அவர் அழகிய வானவில்லை உருவாக்கினார்.
“இனி ஒருபோதும் மக்களையும் மிருகங்களையும் ஜலப் பிரளயத்தால் நான் அழிக்கப் போவதில்லை என வாக்குக் கொடுக்கிறேன். என் வானவில்லை மேகங்களில் வைக்கிறேன். இந்த வானவில் தோன்றும்போது நான் அதைப் பார்த்து என்னுடைய இந்த வாக்கை நினைவுகூருவேன்” என்றார் கடவுள்.
வானில் தோன்றும் ஒவ்வொரு வானவில்லும் இந்த உலகம் கடவுளால் அழிக்கப்படாது என்பதைச் சொல்லும் அழகான அடையாளமாக இருக்கிறது. வாழ்வு குறித்த நம்பிக்கையை, கடவுள் கொடுத்த வாக்குறுதியை நினைவுறுத்தும் அடையாளமாக இருக்கிறது.
(ஆதியாகமம் 8:18-22; 9:9-17)