வி.ராம்ஜி
நவராத்திரித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைப்பதும் நவராத்திரியைக் கொண்டாடுவதும் சக்தியை வழிபடுவதும் என்பதாக அமர்க்களப்படும்.
நவராத்திரியின் ஒன்பது நாள் வைபவத்தின் போதும் சுண்டல் நைவேத்தியம் செய்வது வழக்கம். அதேபோல் பாயச வகைகளும் செய்யப்படும்.
தினமும் ஒவ்வொரு விதமான சுண்டலோ பாயசமோ படையலிடுவதற்கு காரணம் உண்டு.
அதாவது தேவர்களுக்கு சிவனார் அமிர்தம் தந்து காத்தருளினார். அதேபோல், பூமியும் பூமியில் உள்ள மக்களும் உயிர் வாழ்வதற்கு மழை எனும் அமிர்தத்தைத் தந்தருளினார்கள் சிவனாரும் மகா விஷ்ணுவும். இந்த மழையால் பூமி செழித்துக் கொழிக்க, தானியங்கள் விளைந்தன. பூமியில் எங்கு சென்றாலும் தானிய வாசனை.
தானியங்கள் என்பவை சக்தியைக் குறிப்பன. எனவே சக்தி எனும் பெண்ணுக்கு தானியங்களைக் கொண்ட சுண்டல், பாயசம் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, உணவாக வழங்கப்படுகின்றன.
தவிர, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் தோல் நோய் முதலானவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்த நோய்களைப் போக்கும் சக்தி, தானியங்களுக்கு அதிகமாகவே உண்டு. அதனால்தான் நவராத்திரி நாளில் சுண்டலாகவும் பாயசமாகவும் தானியங்களைச் செய்து அனைவருக்கும் வழங்கினார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.