வி.ராம்ஜி
மகாளய பட்ச அமாவாசை தினத்தில், நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்களின் முன்னோர்கள், உங்களை ஆசீர்வதிப்பார்கள். வம்சத்தை வாழையடிவாழையென வாழச் செய்வார்கள்.
மகாளய பட்சம் எனப்படும் இந்த 15 நாட்களும் முன்னோர்கள், மேலுலகில் இருந்து பூமிக்கு வருவதாகவும் அப்போது நம் முன்னோர்கள், நம் வீட்டில் வந்து சூட்சும ரூபமாக இருந்து நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவிக்கிறது சாஸ்திரம்.
பித்ரு கோபம், பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, நாமோ அல்லது நமக்கு மூதாதையர்களில் எவரோ... பித்ருக் கடன் செலுத்தாமல் விட்டிருக்கலாம். அதாவது, அவர்களுக்கான ஈமச்சடங்கில் குறை செய்திருக்கலாம். வருடந்தோறும் வருகிற இறந்த முன்னோர்களின் திதி உள்ளிட்ட காரியங்களைச் செய்யாமல் விட்டிருக்கலாம். இதனால் பித்ருக்களின் கோபத்துக்கு ஆளாவோம் என்றும் பித்ரு தோஷம் என்பது இப்படியான செயல் குறைபாடுகளால் வருகிறது என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தவிர, மனிதனாகப் பிறந்த இந்தப் பிறப்பில், நாம் செய்யும் கடமைகளில் பித்ருக் கடமை என்பது மிக மிக முக்கியமானது என்றும் நாளைய நம் சந்ததியினர் நலமுடனும் வளமுடனும் வாழ்வதற்கு, நேற்று வரை வாழ்ந்து இறந்த நம் முன்னோர்களின் ஆசியும் அருளும் மிகப்பெரிய பலமாக அமைகிறது என்று அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதனால்தான், ஒரு வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். நம் வீட்டில், சுமங்கலியாகவோ கன்யாப் பெண்ணாகவோ எவரேனும் இறந்திருக்கலாம். தற்கொலை அல்லது விபத்தில் எவரேனும் உயிர் துறந்திருக்கலாம். இவர்களுக்காக, நம் முன்னோர்களுக்காக, ஓர் வருடத்தின் 96 தர்ப்பணங்களையும் செய்யச் செய்ய, நம்மைச் சுற்றியுள்ள துஷ்ட சக்திகள், நம்மை விட்டு விலகி ஓடும். நல்ல அதிர்வுகள் கொண்ட சக்தியானது, நம்மைச் சுற்றி அரணெனக் காக்கும் என ஆச்சார்யப் பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.
மகாளய பட்ச புண்ணிய காலத்தின் நிறைவு நாள் அமாவாசை. இது மகாளய பட்ச அமாவாசை எனப்படுகிறது. நாளை 28.9.19 சனிக்கிழமை, மகாளய பட்ச அமாவாசை. மிக மிக முக்கியமானதொரு புண்ய தினம் இது. இந்த நாளில், மறக்காமல் பித்ரு கடன் செலுத்தவேண்டும். எள்ளும் தண்ணீரும் விட்டு, தர்ப்பணம் செய்யவேண்டும்.
ஆறு, குளம், கடல் முதலான நீர்நிலைகளில், தர்ப்பணம் செய்து, முன்னோரை வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். காசி, ராமேஸ்வரம், திருச்சி அம்மாமண்டபம் படித்துறை, திருவையாறு, குடந்தை மகாமகக்குளம், மயிலாடுதுறை காவிரிக்கரை, பவானி கூடுதுறை, கொடுமுடி கரை, சென்னை மயிலாப்பூர், மாம்பலம் அயோத்தியா மண்டபம், கடற்கரைப் பகுதி எனபல இடங்களில் தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். வீட்டிலேயே கூட வழிபடலாம்.
மதுரை அருகே உள்ள திருப்பூவனம், திருவாரூர் அருகே உள்ள திலதர்ப்பணபுரி, செங்கல்பட்டு அருகில் உள்ள நென்மேலி சிராத்த சம்ரக்ஷண பெருமாள் கோயில் என பல தலங்களில், பித்ரு வழிபாடு செய்வது கூடுதல் மகத்துவம் வாய்ந்தது.
நாளை சனிக்கிழமை, 28.9.19 மகாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தின் மிக உன்னதமான நாளான நாளைய தினம்... மறக்காமல் பித்ருக் கடனைச் செலுத்துங்கள். உங்கள் முன்னோர்களை நினைத்து ஒரு நான்குபேருக்காவது, ஒரு சாம்பார் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் என ஏதேனும் ஒரு சாதத்தை, உணவுப் பொட்டலத்தை வழங்குங்கள்.
நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்யும் இந்த அன்னதானத்தில், அவர்கள் குளிர்ந்து போய் ஆசீர்வதிப்பார்கள். என்பது உறுதி.