வி.ராம்ஜி
இறந்தவர்களின் திதியை மறந்தவர்கள் கூட, புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை நாளில், தர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதனாலும் மகிழ்ந்து, ஆசீர்வதிப்பார்கள் முன்னோர்கள்.
சிலரால், புரட்டாசி மகாளய பட்ச 15 நாளிலும் புரட்டாசி அமாவாசையிலும் தர்ப்பணம் செய்து, முன்னோரை வழிபட இயலாதவர்கள், அடுத்த பட்சத்திலும் வழிபாட்டைச் செய்யலாம். அதாவது, தீபாவளி அமாவாசை வரை, முன்னோர்கள் பூலோகத்தில் இருப்பார்கள் என்பதாக ஐதீகம்.
இதையொட்டித்தான், தீபாவளி அமாவாசை நாளில், நம் பெற்றோரையும் முன்னோர்களையும் நினைத்து படையலிடுகிறோம்.
ஆகவே, புரட்டாசி மகாளயபட்சம், புரட்டாசி அமாவாசை,தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில், முன்னோரை நினைத்து வழிபடுங்கள். தர்ப்பணம் செய்யுங்கள்.
தர்ப்பணம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தானம் செய்வதும் மிகவும் விசேஷம். முடிந்த அளவு, உடை, உணவு, போர்வை, செருப்பு ஆகியவற்றை தானமாக வழங்குங்கள். அதேபோல், எள் தானம் செய்வது ரொம்பவே விசேஷம்.
பித்ருக்கள், இந்த நாட்களில், நம் இல்லத்துக்கு வந்து, நாம் என்ன செய்கிறோம் என்று பார்த்துக்கொண்டிருப்பார்களாம். நாம் அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதாலும் அவர்களை ஆராதிப்பதாலும் அவர்களை நினைத்து தானங்கள் செய்வதாலும் நமக்குப் புண்ணியங்களும் நன்மைகளும் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
துர்மரணம், விபத்து, தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆகியோரது ஆத்மா சாந்தி அடைய, அவர்களுக்கு முக்தி கிடைக்க, இந்த நாளில் மகாளய பட்ச காலத்தில், மகாளய பட்ச அமாவாசையில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் ஆத்மாவும் அமைதி பெறும். அவர்களின் ஆசியையும் நாம் பெறலாம்.