ஆன்மிகம்

எதிர்ப்புகளை தெறிக்க விடுவாள் வாராஹி 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


பஞ்சமி திதியில் வாராஹியை வழிபடுங்கள். எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை இனியில்லை என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சப்தமாதர்களில் வாராஹியும் ஒருவர். இன்னும் சொல்லப்போனால், சப்தமாதர்களில், வாராஹிதான் முக்கியதெய்வம். மகாசக்திக்கு தளபதி போல் திகழும் வாராஹியை வழிபட்டால், வரம் தந்தருள்வாள்; நம் வாழ்க்கையையே வரமாக்கி மகிழ்விப்பாள் என்கின்றன சக்தியைப் போற்றும் நூல்கள்.


வாராஹி தேவியை வழிபடுவதற்கு உகந்த நாள், பஞ்சமி திதி நன்னாள். இந்தநாளில், வாராஹிதேவியை தரிசிப்பதே மகா பலம் தந்தருளும் என்கின்றர் பக்தர்கள்.


இன்று 3.9.19 பஞ்சமி திதி. வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை செய்து நைவேத்தியம் பண்ணுவது விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், அதில் குளிர்ந்து போய் அருள்வாள் வாராஹிதேவி.


மேலும், மொச்சை மற்றும் சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தால், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் தந்திடுவாள் வாராஹி.


மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து வாராஹி அன்னையை வணங்கலாம். இதனால், தீய சக்திகள் அனைத்தும் நம்மை விட்டும் நம் இல்லத்தை விட்டும் விலகியோடும் என்பது உறுதி.


இன்று பஞ்சமி திதி நாளில், வாராஹி தேவியை வணங்கி வழிபடுங்கள். மாலையில் வீட்டில் விளக்கேற்றி, மகாசக்தியையே வாராஹியாக நினைத்தும் பூஜிக்கலாம். அருகில் உள்ள சப்த மாதர் சந்நிதிக்குச் சென்று, அங்கே உள்ள வாராஹியையும் வழிபட்டு பலன்களையும் பலத்தையும் பெறலாம்.

SCROLL FOR NEXT