வி.ராம்ஜி
மண் பிள்ளையார் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி வழிபாட்டைக் கொண்டாடுங்கள். நினைத்ததை நடத்திக் கொடுப்பார் தும்பிக்கையான்.
நாளைய தினம் 2.9.19 விநாயக சதுர்த்தி. இந்தநாளில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபடுங்கள். அவருக்கு கிரீடம், குடையெல்லாம் கூட வைத்து அணிவிக்கலாம். மேலும் கண்ணுக்கு குன்றிமணிகள் வைத்து அழகுப்படுத்தலாம்.
விநாயகருக்கு முக்கியமாக சூடவேண்டியது... வெள்ளெருக்கு. இந்த வெள்ளெருக்கைக் கொண்டு, மாலையாக்கி ஆனைமுகனுக்கு அணிவிக்கலாம். அதேபோல், அருகம்புல் மாலை சார்த்தியும் வேண்டிக்கொள்வது மிகமிகச் சிறப்பு.
அதையும் தவிர, மற்ற மலர்களையும் சூட்டலாம், தவறில்லை.
காலையில் பால் மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். மேலும் விரதம் இருக்க இயலாதவர்கள், சாதாரணமாக வழக்கம் போல உணவு எடுத்துக்கொண்டு, பூஜைகள் மேற்கொள்ளலாம்.
பொதுவாகவே, பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அவரின் சந்நிதியில் நின்று தோப்புக்கரணமிட்டு வணங்குவோம். விநாயக சதுர்த்தி நாளில், அவசியம் மறக்காமல், தோப்புக்கரணமிட்டு வணங்குங்கள். தோப்புக்கரணம் என்பது செவிகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதால், மூளைக்குச் செல்லும் நரம்புகள் தூண்டிவிடப்படும். இதனால், ஞாபக சக்தி அதிகரிக்கும். ஒரு செயலை எப்படிச் செயலாற்றுவது என்பதை யோசிக்கும் போது, தெளிவாக யோசிப்பதற்கு வழிவகையாக இருக்கும்.
அப்பம், மோதகம், சுண்டல், கொழுக்கட்டை, முறுக்கு என பட்சணங்களும், தேன், பால் முதலானவையும், வாழைப்பழம், கொய்யாப்பழம், மாதுளை, ஆப்பிள் முதலான பழங்களும் கரும்பு உட்பட வைத்து நைவேத்தியம் செய்யலாம்.