வி.ராம்ஜி
பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைப்பட்ட எல்லா மங்கல காரியங்களையும் நடத்தித் தந்தருள்வார் திருமால். இன்று 26.8.19 திங்கட்கிழமை ஏகாதசி.
மார்கழியில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப் போற்றப்படுகிறது. அதேபோல், மாதந்தோறும் ஏகாதசி திதி உண்டு. விஷ்ணு பக்தர்கள், மாத ஏகாதசி நாளில், விரதம் அனுஷ்டிப்பார்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் முதலானவற்றை பாராயணம் செய்வார்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவார்கள்.
பெருமாளுக்கு உகந்த புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வணங்குவார்கள். மேலும் தங்களால் முடிந்த அளவுக்கு புளியோதரை அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குவார்கள்.
ஆவணி மாத ஏகாதசி இன்றைய தினம் (26.8.19). இந்த இனிய நாளில், காலையில் இருந்து மாலை வரை, முடிந்த போதெல்லாம் மகாவிஷ்ணுவின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்கள் வேதனைகளையெல்லாம் வேங்கடவனிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை ஸேவியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அங்கே வழங்கப்படும் துளசி தீர்த்தம் ஏகாதசியில் ரொம்பவே விசேஷம். மகத்துவம் வாய்ந்தது.
எனவே, ஏகாதசியில் திருமால் தரிசனம், திருப்பங்களை தந்தருளும். மறக்காமல் பெருமாளை ஸேவியுங்கள்.