ஆன்மிகம்

முகமே சிற்பியின் கையெழுத்து

வா.ரவிக்குமார்

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ என்னும் பழமொழிக்கு மிகவும் பொருந்தும் ஊர், சுவாமிமலை. பாரம்பரியமான பஞ்சலோக சிற்பங்களைச் செய்யும் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுவாமிமலையில் இருக்கின்றன.

இந்த தெய்வீகப் பணியில் உள்நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் தன்னுடைய சிற்பத் திறமையால் எண்ணற்ற பஞ்சலோகச் சிற்பங்களை வடித்துக் கொடுத்த பெருமைக்கு உரியவர் சுவாமிமலை சிற்பி தேவசேனாபதி ஸ்தபதி.

லண்டனில் முருகன் கோயில், லட்சுமி நாராயணன் கோயில், சிங்கப்பூர் சிவகிருஷ்ண கோயில்களின் சிற்பங்கள் இவரால் வடிக்கப்பட்டவை. அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கும் சிவன் கோயிலுக்காக தேவசேனாபதி ஸ்தபதி, உருவாக்கிய 108 சிவதாண்டவ சிலைகள் உலகப் புகழ் பெற்றவை.

செஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட தேவசேனாபதி ஸ்தபதி, சிற்பக் கலையில் அரிய சாதனைகளை நிகழ்த்தியதற்காக இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றவர். அவரின் மறைவுக்குப் பின்னர், அவருடைய பேர் சொல்லும் பிள்ளைகளான ராதாகிருஷ்ண ஸ்தபதி,  கண்ட ஸ்தபதி, சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் தேவசேனாபதி சிற்பக் கூடத்தைப் பழமை மாறாமல் நடத்திவருகின்றனர்.

வாழ்க்கை கொடுக்கும் வண்டல்

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவதற்காக, பல ஊர்களிலிருந்து சிற்பிகளை அழைத்து வந்து அந்த மாபெரும் திருப்பணியை முடித்திருக்கிறார். அதன் பின், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள தாராசுரம் கோயில்களை இச்சிற்பிகளைக் கொண்டே கட்டினார். அதன் பின் அருகில் உள்ள சுவாமிமலை கோயிலின் திருப்பணிக்காக இச்சிற்பிகள் சுவாமிமலைக்கு இடம்பெயர்ந்தனர். சுவாமிமலை திருப்பணியினை முடித்த பின், காவேரி ஆற்றுப் படுகையில் கிடைக்கின்ற வண்டல் மண், இப்பஞ்சலோக சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற மண்ணாக இருந்ததால், சிற்பிகளில் பல குடும்பத்தினர் இங்கேயே தங்கிவிட்டனர். தேவசேனாபதி சிற்பக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம், சுவாமிமலை சிற்பிகளின் வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகின்றது. சுவாமிமலையில் பாரம்பரியமான முறையில் பஞ்சலோக சிலைகளைச் செய்யும் ஸ்தபதிகள் பரம்பரையின் விவரங்கள் அடங்கிய அரசு அறிவிப்பு அது.

தங்களின் தந்தையும் மிகச் சிறந்த சிற்பியுமான தேவசேனாபதியின் அடியொட்டி உலகம் முழுவதும் சுவாமிமலை பஞ்சலோகச் சிற்பக் கலையின் புகழைப் பரப்பிவருகின்றனர், ராதாகிருஷ்ண ஸ்தபதி சகோதரர்கள். இவர்களின் பட்டறையில் ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.

சிற்பக் கலை வளர்க்கும் சகோதரர்கள்

மேற்கு வங்கத்தின் `ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ கோயில், மிகப் பிரமாண்டமானது. இந்தக் கோயிலுக்காக இவர்கள் 10 .5 அடியில் பஞ்ச தத்துவ சிலைகளை (ஒவ்வொரு சிலையும் 3,000 கிலோ எடை) உருவாக்கியுள்ளனர். பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையிடக் கட்டிடத்துக்கு, ஐந்தடி உயர நடராஜர் சிலையினை ராதாகிருஷ்ண ஸ்தபதி சகோதரர்கள் வடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் தங்க ரத அம்மன், உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் உற்சவர், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் உற்சவர் சிலைகள், ரத்தினகிரி முருகன் கோயில் பஞ்சலோக சிலைகள், வேலூர் அருகில் உள்ள 9 அடி உயர பஞ்சலோக பெருமாள் சிலை,  முஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் இருக்கும் 9 அடி உயர பஞ்சலோக துவார பாலகர் சிலை, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 6 அடி நடராஜர் சிலையுடன் 108 சிலைகளும் தேவசேனாபதி சிற்பக் கூடத்தின் படைப்புகள்தான்.

“நான் மாமல்லபுரம் அரசு சிற்பக்கலைக் கல்லூரியில் கோயில் கட்டுமான சிற்பக் கலையை புகழ்பெற்ற வை. கணபதி ஸ்தபதியிடம் படிச்சேன். ஆனால், எங்களின் பாரம்பரிய சிற்பக் கலையான பஞ்சலோக சிற்பங்களைத்தான் இப்போழுது செய்துவருகிறேன். வெளிநாட்டில் வாழும் இந்தியர் ஒவ்வொருவரும் தங்களின் வீட்டில் பஞ்சலோகச் சிற்பங்களை வைத்து வழிபடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது உலக நாடுகளில் சுவாமிமலை பஞ்சலோகச் சிற்பம் என்பது பிரசித்தி பெற்று விளங்குகிறது” என்கிறார் ராதாகிருஷ்ண ஸ்தபதி.

பஞ்சலோக விக்ரகங்களின் காலப் பிரமாணம்

சுவாமிமலை பஞ்சலோக விக்ரகங்கள் சோழர் காலம் முதற்கொண்டு, மிகப் பழமையான முறையில்தான் அமைக்கப்படுகின்றன. விக்ரகங்கள் அமைக்கும் அளவுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, உத்தம தச தாளம், மத்திம தச தாளம், அதம தச தாளம்.

சுவாமிமலையில் அமைக்கப்படும் மெழுகு வடிவங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. சிலையின் அளவுகள் தென்னங்கீற்று ஓலையில் ஒன்பது பகுதியாகப் பிரித்து கணக்கிடப்படுகின்றன. இந்த ஓலை அளவு பிரமாணத்தை சுவாமிமலை முழக் கோல் என்று அழைப்போம்.

தற்போது சுவாமிமலையில் வழக்கத்தில் உள்ள ஓலை அளவு நவ தாள அளவு - ஒன்பது ஒடி அளவு, பஞ்ச தாள அளவு ஐந்து ஒடி அளவு ஆகிய இரண்டு அளவுகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. ஓலையில் ஒன்பது பாகங்களாகப் பிரித்து அமைக்கும் சிலைகள்: சிவன், விஷ்ணு, பெண் தெய்வங்கள், மற்ற தெய்வ வடிவங்கள்.

ஐந்து பாகங்களாகப் பிரித்து அமைக்கும் சிலைகள்: விநாயகர், பூத கணங்கள், குழந்தை வடிவச் சிலைகள்.

மேற்படி அளவு முறைகளில் தியான சுலோகங்களின்படி சிற்பிகள் ஒவ்வொரு சிலையையும் மெழுகினால் வடிக்கின்றனர். தியான சுலோகங்களில் ஒவ்வொரு சிலையின் அமைப்பும் விளக்கமாக விவரிக்கப்படுகின்றது.

மேற்படி சிற்ப சாஸ்திர அளவுப் பிரமாணங்களின்படியும், மேற்படி தியான சுலோகங்களில் சொல்லப்பட்ட அமைப்புகளின்படியும் சுவாமிமலையில் சிற்பிகளால் மெழுகினால் தெய்வ வடிவங்கள் உருவாக்குகின்றனர்” என்றனர் தேவசேனாபதி சிற்பக் கூடத்தின் சகோதரர்கள்.

ஒரு சிற்பியின் மனநிலை அவன் வடிக்கின்ற சிலையின் முகத்தில் பிரதிபலிக்கும் என்னும்  கண்ட ஸ்தபதி, “பஞ்சலோக சிற்பங்கள் எனும்போது அதன் ஆபரணம், நகாசு வேலை மற்றும் முக அமைப்பு மிகவும் முக்கியம். இவற்றில் முகம் அமைப்பது என்பது ஒருவரின் கையெழுத்து போன்றது. முகம் அமைப்பதற்கான ஏற்ற நேரம் காலை நேரம்தான்” என்னும்  கண்ட ஸ்தபதி தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) இயக்குநராக மூன்று முறை பணியாற்றியவர்.

SCROLL FOR NEXT