வி.ராம்ஜி
ஆடி மாதத்தின் கடைசிச் செவ்வாய்க்கிழமை இன்று (13.8.19). எனவே, இந்தநாளில், சக்தி தரும் அம்மன் தரிசனத்தை மறக்காமல் செய்யுங்கள்.
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம்.
இந்த மாதத்தில், வழக்கத்தை விட இன்னும் சாந்நித்தியமாகத் திகழ்வாள் அம்பிகை. இந்த மாதம் முழுவதுமே, எல்லா அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் அலங்காரங்களும் அபிஷேக ஆராதனைகளும் அமர்க்களப்படும்.
அம்மனுக்கான நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகிற மாதம் இது. அம்மனுக்கு கூழ் படையலிடுவார்கள் பக்தர்கள். எல்லோருக்கும் விநியோகித்து மகிழ்வார்கள். மேலும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும் பால் குடம் ஏந்தி வந்து தரிசிப்பதும் விமரிசையாக நடந்தேறும்.
இன்று ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை (13.8.19). எனவே, இந்த செவ்வாய்க்கிழமையில், மறக்காமல் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். அம்மனை கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
காலை மாலை எப்போது வேண்டுமானாலும் அம்மனை தரிசிக்கலாம். முடிந்தால், மாலை 3 முதல் 4.30 வரையிலான நேரத்தில், அம்மனை தரிசியுங்கள். அந்த நேரம் இன்றைக்கு ராகுகாலம். எனவே, இந்த ராகுகால வேளையில், அம்மனை தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். அப்போது துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி, வழிபடுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருந்த கவலைகளையெல்லாம் தீர்த்திடுவாள் அம்பிகை. துக்கங்களையெல்லாம் போக்கிடுவாள் துர்கை.
இந்தநாளில்... ஆடி கடைசிச் செவ்வாய்க்கிழமையில், அம்மனை மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தந்திடுவாள் தேவி!