ஆன்மிகம்

இஸ்லாம் வாழ்வியல்: சிறுவர்களின் சாதுரியம்

இக்வான் அமீர்

தொழுகைக்காக அந்தச் சிறுவர்கள் இருவரும் பள்ளிவாசலுக்கு சென்றார்கள். தொழுகைக்கு முன்பாக உடல் சுத்தத்தின் ஒரு பகுதியாக முகம், கை,கால்கள் முறையாக கழுவிக்கொள்ள வேண்டும். இதற்கு ‘ஒளு’ என்று பெயர். அந்த சிறார்களும் ‘ஒளு’ செய்யத் தொடங்கினார்கள்.

எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவர் தப்பும் தவறுமாய் உடல் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

ஒளுவை அதற்குரிய முறைமையுடன் செய்ய வேண்டும். இதைப் பெரியவரிடம் தெரிவித்து அவரைச் சரியாக செய்யச் சொல்ல வேண்டும் என்ன செய்வது? இருவரும் ஆலோசனை செய்தார்கள். ஒரு திட்டம் தீட்டினார்கள்.

சிறுவர்கள் இருவரும் பெரியவர் அருகே சென்றார்கள். பணிவுடன் ‘சலாம்’ சொன்னார்கள்.

“அய்யா! சிறுவர்களாகிய எங்களுக்கு ஒளு செய்வது எப்படி என்று சரியாகத் தெரியவில்லை. ஒளு சரியாக செய்யாவிட்டால் எங்கள் தொழுகையும் நிறைவேறாது. அதனால், இதோ இப்படி அமர்ந்து நாங்கள் செய்து காட்டுகிறோம். நாங்கள் செய்தது சரியா என்று நீங்கள் தயவுசெய்து பார்த்துச் சொன்னால் போதுமானது!” என்று கேட்டுக்கொண்டனர்.

அதன்பிறகு சிறுவர் இருவரும் பெரியவர் எதிரே அமர்ந்து மெதுவாக உடல் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.

சிறுவர்கள் சரியான முறையில் செய்து காட்டியதால், பெரியவர் தன் தவறை உணர்ந்தார். உடல் தூய்மையை முறையாகச் செய்யவும் கற்றுக்கொண்டார்.

அங்கிருந்து சிறுவர்கள் சென்றதும், ஒழுங்காக உடலை சுத்தம் செய்துகொண்டு எழுந்தார்.

“இறைவனின் திருத்தூதர் நபிகளார் நளினமாகத் தம் தோழர்களை திருத்துவதைப் போலவே இந்தச் சிறுவர்களும் என் தவறை நளினமாகச் சுட்டிக் காட்டிய பண்பை என்னவென்பேன்?” என்று வியந்து பாராட்டியவாறே தொழுகைக்காகப் பள்ளியில் நுழைந்தார்.

தங்கள் சாதுர்யம் வென்றதைக் கண்டு நபிகளாரின் அன்பு பேரர்களான ஹஸைனும், ஹீஸைனும் புன்னகைத்துக்கொண்டார்கள்.

SCROLL FOR NEXT