ஆன்மிகம்

திருதருமபுரத்தில் அருளும் யாழ்முறிநாதர்

வா.ரவிக்குமார்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்

நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்

பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்

அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்

வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை

இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

- திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பதிகம் இது என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதிகத்துக்குப் பெயரே யாழ்முறி பதிகம். இந்தப் பதிகத்தை திருஞானசம்பந்தர் பாடிய இடம் காரைக்காலுக்கு அருகில் இருக்கும் திருதருமபுரம்.

சமயக் குரவர்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் திருதருமபுரத்தில் இருக்கும் சிவாலயம் ஒன்று ஆச்சரியமான பல செய்திகளை, வரலாற்றை தன்னகத்தே கொண்ட தலமாகச் சிறப்பு பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் காரைக்காலுக்கு அருகிலிருக்கும் திருதருமபுரத்தில் அமைந்துள்ள இத்தலத்துக்கு வந்தார். இந்த ஊரில்தான் திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தன்னுடைய யாழின் மூலம் வாசித்து மகிழும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் இருந்தார். திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தார்.

இந்த உண்மை அறியாமல் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள், யாழ்ப்பாணரின் இசையின் மேன்மையாலேயே உங்களின் பதிகங்கள் சிறக்கின்றன என்று திருஞானசம்பந்தரிடம் கூறினர்.

இதைக் கேட்டு மனம் வருந்திய திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தரிடம், யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்டினார்.

உடனே திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்தான் நீங்கள் மேலே படித்தது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ என்னும் வரிக்கு திருநீலகண்ட யாழ்ப்பாணரால் யாழில் இசை சேர்க்க முடியவில்லை. உடனே தன்னிடமிருந்த யாழை உடைக்க முயன்ற திருநீலகண்டரை இயன்றவரை வாசிக்கும்படி ஆட்கொள்கிறார் திருஞானசம்பந்தர். இந்தச் சம்பவத்தையொட்டியே இத்திருத்தலத்தின் இறைவனுக்கு யாழ்முறிநாதர் என்னும் திருப்பெயர் அமைகிறது.

இத்திருத்தலம் தொடர்பாக இன்னொரு கதையையும் சொல்கின்றனர். அதாவது தன்னுடைய யாழ் இசையின் மூலமாகவே பதிகங்கள் பெரும் பேறு பெறுகின்றன என திருநீலகண்ட யாழ்ப்பாணர் கர்வம் கொண்டிருந்தாராம். அவரின் கர்வத்தை அடக்கவே திரஞானசம்பந்தரை யாழ்முறிப் பதிகம் பாடவைத்தார் இறைவன். அதோடு கர்வம் அழிந்து தனது யாழை உடைக்க முனைந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரிடமிருந்து, அடியார்கள் கூட்டத்தில் ஒருவராக இருந்த இறைவன் யாழை வாங்கி வாசித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இசையில் மெய் மறந்த தட்சிணாமூர்த்தி

சிவன் யாழ் வாசித்த போது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையில் மெய்மறந்து பின்புறமாகச் சற்றே சாய்ந்தாராம். இத்திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் சிற்பம் சற்று சாய்ந்தே உள்ளது சிறப்பு. மஞ்சள் நிற வஸ்திரம்தான் பொதுவாக தட்சிணாமூர்த்திக்குச் சாற்றுவார்கள். இத்தலத்திலோ காவி நிறத்தில் வஸ்திரம் சாற்றுகிறார்கள்.

பிரார்த்தனை

இங்கு ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி ஆகியன செய்து வேண்டிக்கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் உத்தராட நட்சத்திர தினத்தில் துர்க்கைக்கு அபிஷேகங்கள் செய்து வேண்டுகிறார்கள்.

கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். இறைவி தேனாமிர்தவல்லி. இசை கற்பவர்கள் சிவன், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தருக்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்தருக்குக் காட்சி தருகிறார்.

SCROLL FOR NEXT