வி.ராம்ஜி
ஆடிப்பெருக்கு என்பது நதியைக் கொண்டாடும் விழா. தண்ணீரைக் கொண்டாடும் வைபவம். முக்கியமாக, காவிரி நதியைப் போற்றுகிற ஒப்பற்ற திருவிழா. நாளைய தினம் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு. ஆடிப்பதினெட்டு (3.8.19).
காவிரி ஆற்றையொட்டி கரைப் பகுதிகளில் அந்தக் காலத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டன. காவிரி பாய்ந்தோடி வருகிற வேளை என்பதால், மக்கள் நதியில் இறங்கி வணங்கும்போது சுழலில் சிக்கி, அதன் வேகத்துக்கு அவர்களை இழுத்துக் கொள்ளாதபடி, கரைப் பகுதியில் கொஞ்சம் மேடான இடமாகப் பார்த்து மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்சியில் அகண்ட காவிரியாக பிரமாண்டத்துடன் ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடுவார்கள்.
அதேபோல, தஞ்சாவூரில் உள்ள திருவையாறு, காவிரியை வரவேற்க விழாக்கோலம் பூண்டிருக்கும். அக்கம்பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள், குடும்பம் குடும்பமாக வந்து காவிரி நீரில் மஞ்சள் தூவி, குங்குமம் தூவி, பூக்களை ஆற்றில் விட்டு, வணங்குவார்கள்.
விவசாயம் செழிக்கவேண்டும், காடு கரையெல்லாம் நீரால் நிறைந்திருக்கவேண்டும், போட்ட விதையெல்லாம் பொன்னெனத் திகழ வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்ட இந்த ஆடிப்பெருக்கு வைபவம், ஒருகட்டத்தில் இல்லம் செழிக்கும் விழாவாகவும் இன்னும் சீராட்டிக் கொண்டாடப்பட்டது.
ஆடிப்பெருக்கு நன்னாளின் போது இல்லறத்தில் நுழைந்த புதுத் தம்பதியை கரைக்கு அழைத்து வருவது சடங்கானது. புதுமணத் தம்பதி, ஆடி மாதத்தில் பிரிந்திருப்பார்கள் அல்லவா... அப்போது மாப்பிள்ளையைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து, புத்தாடைகள் வழங்குவார்கள். பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு காவிரிக் கரையில், ஆடிப் பதினெட்டாம் நாளில், மஞ்சள் சரடு கட்டிக்கொள்ளும் வைபவம் நடைபெறத் துவங்கியது. அது, இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதை ‘தாலி பிரித்துப் போடுதல்’ என்பார்கள்.
அங்கேயே, பொங்கல் படையலிட்டு காவிரியை வணங்குவார்கள். ‘நீண்ட நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் காவிரியே, உன்னைப் போல் இந்தத் தம்பதியின் வம்சமும் காலாகாலத்துக்கும் நீடிக்க வேண்டும், வாழையடி வாழையென வளரவேண்டும்’ என வேண்டிக்கொண்டார்கள்.