வி.ராம்ஜி
ஆடி மாதம் அற்புதமான மாதம். அம்மனுக்கு உகந்த மாதம். கலைத்துப் போடும் காற்றும் நனைக்கிற அளவுக்கு பெய்யும் மழையும் கைகோர்க்கும் காலம். இதுதான் மழைக்காலத்தின் துவக்கம். இப்படியான பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆகவே, ஆடி மாதத்தில், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல், நினைக்கும் போதெல்லாம் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். வேப்பிலைக்காரிக்கு, எலுமிச்சை மாலை சார்த்துங்கள். எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். காலையும் மாலையும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றுங்கள்.
திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமையப் பெறுவார்கள் என்கின்றன சாஸ்திர நூல்கள்.
மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபிட்சம் குடிகொள்ளும்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மறக்காமல், எலுமிச்சைக்காரியை தரிசியுங்கள். வேப்பிலைக்காரியின் திருமுகத்தையும் கனிவு ததும்பும் கண்களையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாக் கவலைகளும் காணாமல் போகும். தகித்த மனமும் சிந்தனையும் குளிர்ந்து போகும்!