அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களையும் உலகிற்கு உள்ளவாறு உணர்த்தி உய்யும் நெறியைக் காட்டும் மகா சித்தர்களுள் ஒருவர் அருள்மிகு ஸ்ரீ தோபா சுவாமிகள். சித்தத்தை சிவமயமாக்கிச் செய்தல் தவம். தமது அருட்பண்பு கொண்டு அட்டமாசித்திகளை நிகழ்த்திக் காட்டியவர் இவர் என்று சொல்லப்படுகிறது.
ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்தலைத் தமது பெருநெறியாகக் கொண்ட தயாளர். இயன்றோருக்கும் இயலாதோருக்கும் வரமளிக்கும் வரமாகத் திகழ்ந்தவர். `தோடுடைய செவியன்` எனப் பாடி அருளிய திருஞான சம்பந்தரைக் மானசீக குருவாகக் கொண்டு தோபா சுவாமிகள் என்ற பெயரில் தெய்வ அறம் காத்தவர். இவர் சதா சர்வ காலமும் `தோ, தோ` என்ற சொல்லை மகா மந்திரம்போல் உச்சரித்துவந்ததால் பக்தர்கள் தோபா சுவாமிகள் என்றழைத்ததாகச் செவிவழி செய்தி தெரிவிக்கிறது.
மகான் ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார புருஷர். இவரது பெற்றோர் ராமேஸ்வரம் சென்று வந்தபின் இவர் பிறந்ததால் அதன் நினைவாக ராமலிங்கம் எனப் பெயரிட்டனர். இள வயதில் பெற்றோரை இழந்த ராமலிங்கம். ஆங்கிலேயப் படையினரால் வளர்க்கப்பட்டு, போர்க்கலைகளையெல்லாம் கற்றார். பின்னர் அப்படையிலேயே பதவியும் பெற்றார். இவற்றையெல்லாம் துறந்து இறை தியானத்தில் மூழ்கினார் ராமலிங்கம்.
தோபா சுவாமிகள் என்ற சிறப்புத் திருநாமம் பெற்ற இவர் திருவொற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்து, அந்த வழியாகச் செல்பவர்களின் குணத்தைக் குறிப்பது போல நாய் போகிறது, நரி வருகிறது, கழுதை கத்துகிறது, பேய் திரிகிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பாராம். அப்போது, வடலூர் ராமலிங்க அடிகளார், இவர் இருந்த அந்தத் தெரு வழியே வர முதல் முறையாக மனிதர் வருகிறார் என்றாராம். இவரை நோக்கிய வடலூர் ராமலிங்க அடிகள், தன்னைப் போல் இவரும் மகான் என்பதை உணர்ந்து அதனை அங்குள்ளோரிடமும் தெரிவித்தார்.
தோபா சுவாமிகள் ஒரு நாள் இல்லத்தின் வாயிலில் நின்று பிச்சை கேட்டார். அப்பெண்மணியோ மிகுந்த பக்தியுடன் பாதி வெந்துகொண்டிருந்த சாதத்தை அவசரமாக அளித்துவிட்டார். உடனே உள்ளே சென்று பானை சாதத்தைக் கிளற முயல, சாதம் முழுமையாக வெந்திருந்ததாம். மகான் செய்த அற்புதம் இது என்கிறார்கள். இவருடைய ஜீவ சமாதி மடம் வேலூரில் உள்ளது.
இந்த மகான் சென்னை அசோக்பில்லர் அருகே உள்ள சிவன் கோயிலில் பூஜை செய்து சில நாட்கள் தங்கியதால் ஸ்ரீ தோபா சுவாமி ஸ்ரீ மல்லிகேஸ்வரர் ஆலயம் என்று பெயர் பெற்று இன்றும் அக்கோயில் சிறப்புடன் விளங்கிவருகிறது.