ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் மகா கோதாவரி புஷ்கரம் விழா ஜூலை 13-ம் தேதி தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் நாசிக், ஹரித்துவார், அலகாபாத், உஜ்ஜைன் ஆகிய நகரங்களில் கொண்டாடப்படும் கும்பமேளாவுக்கு நிகரகாகப் பல லட்சம் மக்கள் பங்குபெறும் விழா இது. புஷ்கரம் விழா நாள்களில் ஆற்றில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா நடைவெறுவது வழக்கம். கோதாவரி புஷ்கரம் விழா இறுதியாகக் கடந்த 2003 ம் ஆண்டு நடைபெற்றது. இந்தக் குறிப்பிட்ட நாள்களில் கோதாவரி ஆற்றில் புஷ்ரக தேவன் வந்து கோதாவரியில் நீராடுவதாக நம்பப்படுகிறது. அந்த நாள்களில் கோதாவரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
2003-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போது கோதாவரி புஷ்கரம் விழா தொடங்கியுள்ளது. மற்ற புஷ்கர விழா காட்டிலும் இந்த விழா முக்கியத்துவமும் சிறப்புமானது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால் விழாவின் பயனும் புண்ணியமும் சிறப்பாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது 144 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மிக அரிய வைபவம். அதனால் இந்த விழா மகா கோதாவரி புஷ்கர விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஜூலை 14-ம் தேதி காலை 6.26 மணிக்கு குருபகவான் பிரவேசிப்பதில் தொடங்கும் விழா அடுத்த பன்னிரெண்டு நாள்கள் நடைபெற இருக்கிறது. 25 ஜூலை 2015-ம் ஆண்டு நிறைவடைகிறது. அந்த நாள்களில் கோதாவரியில் நீராடுவதால் பாவங்கள் நீங்கி நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது.
ஆந்திர மாநிலம் இரண்டான பிறகு நடக்கும் முதல் புஷ்கர விழா என்பதால் இரு மாநில அரசுகளும் இதற்கான பிரத்யேக ஏற்பாடுகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு செய்துவருகின்றன. இரு அரசுகளும் இதற்காகத் தனியான இணையப் பக்கங்களைத் தொடங்கியிருக்கின்றன. ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பாஸர், கொட்டிலிங்காலா, காளீஸ்வரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் ஆந்திரப் பிரதேசத்தில் ராஜமுந்திரி, கோவூர், நாரசம்மபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் புனித நீராடுவதற்காக இரு அரசுகள் சார்பிலும் 386 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.