ஆன்மிகம்

விவேகானந்தர் மொழி: சுற்றிவரும் தீப்பந்தம்

செய்திப்பிரிவு

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்றுவருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாதபோது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே.

தன் சகோதர மக்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள்மீது மாய வலையை வீசியதுபோன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும் போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன்மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

இது உண்மை என்றாலும் எந்தப் பௌதீக நியதிகளும் இதற்கு விளக்கம் தர முடியாது. வேதியியல் அறிவாலோ பௌதீக நூல் அறிவாலோ எப்படி அதை விளக்குவது? ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும், கார்பனும் இத்தனை மூலக்கூறுகள், இன்னின்ன நிலைகளில், இந்த அளவு என்றெல்லாம் குறிப்பிட்டு ஆளுமை என்ற புதிரை விளக்க முடியுமா?

ஆனாலும் இது உள்ளது என்பது நமக்குத் தெரியவே செய்கிறது. அது மட்டுமின்றி, இதுதான் ஆளுமை, இதுவே உண்மை மனிதன்; வாழ்வதும், இயங்குவதும், செயல்புரிவதும் அவனே. அந்த உண்மை மனிதனே ஆதிக்கம் செலுத்துகிறான்; தன் சகோதர மக்களை இயக்குகிறான்; பின்னர் உலகிலிருந்து வெளியேறுகிறான். அவனுடைய அறிவும் நூல்களும் செயல்களும் அவன் விட்டுச்சென்ற சுவடுகள் மட்டுமே. இதை நினைத்துப் பாருங்கள்.

மாபெரும் ஆச்சாரியர்களைச் சிறந்த தத்துவ அறிஞர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தத்துவ அறிஞர்களால் மிக அரிதாகவே பிறருடைய அக ஆழங்களில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முடிந்தது. ஆனால் அவர்கள் மிகச் சிறந்த நூல்களை எழுதவே செய்தார்கள். மாறாக, ஆச்சாரியா்களால் தங்கள் வாழ்நாளில் நாடுகளையே ஆட்டிவைக்க முடிந்தது.

இந்த வேறுபாட்டிற்குக் காரணம் ஆளுமைதான். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆளுமை தத்துவ அறிஞர்களிடம் வலிமை குன்றியதாக உள்ளது; மாபெரும் தீர்க்கதரிசிகளிடம் வலிமை மிக்கதாக விளங்குகிறது. முன்னதில் அறிவு தொடப்படுகிறது. பின்னதில் வாழ்வு தொடப்படுகிறது.

ஒன்றில் அது ஒரு வேதியியல் முறை மட்டுமே சில ரசாயனப் பொருட்களைச் சேர்த்து வைக்கிறோம்; அவை மெல்ல இணைந்து, தகுந்த நேரத்தில் பளீர் என ஒளி வீசலாம்; சிலவேளைகளில் ஒளிராமலும் போகலாம். மற்றொன்றிலோ, அது பிறவற்றையும் எரியச் செய்தவாறே விரைந்து சுற்றிவரும் தீப்பந்தம் போன்று இருக்கிறது.

SCROLL FOR NEXT