ஆன்மிகம்

இஸ்லாம் வாழ்வியல்: நோன்பின் இறுதிச் சுற்று

இக்வான் அமீர்

ரமலானின் கடைசிப் பத்து இரவுகள்தான் பாக்கி. மூன்றில் இரண்டு பகுதி நோன்புகள் கழிந்துவிட்டன. இறைவனின் அருளுக்கும், மன்னிப்புக்கும் உரிய இரு பகுதிகள் கழிந்து இறைவனின் பாதுகாப்புக்கான இறுதிப் பகுதிக்குள் நோன்பாளிகள் நுழைந்துள்ளனர். தங்கள் நோன்புகளின் தவறுகளைச் சீர்செய்து கொள்ள வேண்டிய கடைசித் தருணமிது! பசித்தவர் பசியைப் போக்கி, தேவையுள்ளோர்க்கு உதவிகள் செய்யும் காலம்.

ஒருவருக்கொருவர் தங்களிடையிலான பூசல்களுக்கு முடிவுகட்டி மன்னிக்கும் மகத்தான குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாட்கள். அடியார்களின் பாவங்களை மன்னிக்க இறைவன் அடிவானத்தில் இறங்கி வரும் காலம் இது.

“என்னிடம் இறைஞ்சுவோர் யாருமில்லையா? நான் அவர்களின் முறையீடுகளைக் கேட்க இதோ தயாராக இருக்கிறேன்! என்னிடம் பாவமன்னிப்பு கேட்போர் யாருமில்லையா? நான் அவர்களின் பாவங்களை இதோ மன்னிக்கத் தயாராக உள்ளேன்!” என்று இறைவன் தன் அடியார்களைக் கூவி அழைக்கும் நாட்கள் இவை.

இதுவரையிலான தனது நோன்புகள் குறித்து ஒரு சுயமதிப்பீடு செய்யும் கடைசிச் சுற்று இது.

ரமலானின் இந்தக் கடைசிப் பத்து நாட்களில்தான் அந்தியிலிருந்து வைகறைவரையிலான நேரத்தில் சிறப்புக்குரிய இரவு ஒன்று ஒற்றைப்படை நாட்களில் மறைந்துள்ளது. திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இரவு. ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த, ‘லைலத்துல் கத்ர்’ எனப்படும் மாட்சிமை மிக்க, அருள்வளமும், நற்பாக்கியங்களும் நிறைந்த இரவு அது.

சாந்தியும், சமாதானமும் சுற்றிச் சூழ்ந்த இரவு. வானவர்களும், வானவர் தலைவர் ஜிப்ரீயலும் இறைவனின் கட்டளைகளை ஏந்தி வரும் இரவு. “திண்ணமாக நாம் இதனை குர்ஆனை மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம்.

மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும், ‘ரூஹீம் ஜிப்ரீயல்’ தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது; வைகறை உதயமாகும்வரை!” (97:1-5) என்கிறது திருக்குர்ஆன்.

ரமலானின் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாட்களில் மறைந்துள்ள அத்தகைய இரவை நோன்பாளிகள் விழித்திருந்தும், தியானித்திருந்தும், பயன் பெறுவதே அறிவுடைமை.

“ரமலானின் அருட்கொடைகளையும், மகத்துவத்தையும், பாவமன்னிப்பையும் பெறாதவன் இழப்புக்குரியவனாகிவிட்டான்!” என்று நபிகளாரும் எச்சரிக்கிறார்.

SCROLL FOR NEXT